பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்331

(வி - ம்.) சால் - மிடா, கோங்கங்காய்மிடாப் போன்றிருத்தலை முன்னர்க் கூறினாம். இலவங்காய் அணில்போன்றிருத்தலை "ஊன்தகர்த்தனைய போன்று மூடெரி முளைப்ப போன்றுந் - தோன்றுபூ விலவத்தங்கட் டொகையணி லனைய பைங்காய் -" என்னுஞ் சிந்தாமணி (கனக மாலையார் - 145) செய்யுளானறிக. தக்கோலம் : ஒருவகை மரம்; வால்மிளகென்பாருமுளர்.

(36)

 கரைத்தலை யண்ட மணைத்தடை கிடக்குங்
           களிமயில் கயிலையந் தீர்த்தத்
 திரைத்தலைச் சினையை நோக்கிய மீனஞ்
           சிந்தைசெய் கூர்மமிம் மூன்றும்
 விரைத்தபூங் கடம்ப னூற்றினா னோக்கான்
           விழுத்தக வுன்னலா னருளைத்
 தரைத்தலை வழங்குத் திறத்தினைக் காட்டத்
           தழைத்தநெஞ் சொடும்புனல் படிந்தான்.

(இ - ள்.) கரையினிடத்து முட்டைகளையணைத்து அவயங்காக்குங் களிப்பினையுடைய மயில்களும் கயிலையின் கண்ணுள்ள தீர்த்தத்தின் அலையினிடத்து முட்டைகளை நோக்கிய மீன்களும், அம்முட்டைகளை நீரின் கண்ணிருந்து சிந்தனை செய்கின்ற யாமையுமாகிய இவைகள் மூன்றும் வாசனையைச் செய்கின்ற கடப்பமாலையினையணிந்த முருகப்பெருமான் பரிசத்தானும், பார்வையானும், மேலாம் வண்ணம் நினைத்தலானும் அருளினைப் பூமியின்கண்ணுள்ள ஆன்மாக்களுக்கு அளிக்கும் பரிசம், நோக்கு, பாவனையாகிய மூவகைத் தீக்கையின் வகையினைக் காட்டத் தழைத்த நெஞ்சினோடும் நீரின்கண் மூழ்கினான்.

(வி - ம்.) இத்தீர்த்தம் கைலைக்கணின்றும் அழைக்கப்பட்டதாதலின் அதிலுள்ள மீனத்தை "கைலையந் தீர்த்தத் திரைத்தலைச் சினையை நோக்கியமீன" மென்றார். மூவகைத்தீக்கை, நோக்கம் - பரிசம் - பாவனையென மூன்றாகும். இதனை "அன்னதன் சிசுவை யைய னாமைமீன் பறவை போல" எனவருங் கைவல்லியச் செய்யுளானறிக, விரைத்த வாசனையையுடைய. அண்டம் - சினை. அடைகிடக்கும் - அவயங்காக்கும்.

(37)

 வந்தடி பணிந்த மாதவர்க் கங்கை மலரெடுத் தெதிர்ந்தவர்த் தழுவி
 அந்திலா தனத்தி லிருந்தமூ தறிவோர்க் கஞ்சலி வணக்கமு மளித்துக்
 கொந்தவிழ் சோலைக் குன்றுசூழ் போகிக் குருஉமணி குயின்றொளி யசும்பும்
 சுந்தரச் சோபா னங்களி னிவர்ந்து சுடர்மணிக் கோயிலைச் சார்ந்தான்.

(இ - ள்.) வந்து பாதத்தின்கண் வணங்கிய மாதவத்தினர்க்கு அழகிய கையாகிய மலரினைத் தூக்கி யஞ்சலிசெய்து தன்னை வந்தெதிர் கொண்டவர்களைத் தழுவுதல்செய்து, சுகாசனம் பத்மாசனம் முதலிய ஆதனங்களிலிருந்து தவஞ்செய்கின்ற பேரறிவினையுடையார்க்கு வணக்கஞ் செய்து வாசனை விரிகின்ற சோலையாற் சூழப்பெற்ற தணிகைமலையினை வலம்வந்து நிறம் பொருந்திய மணிகள் பதிக்கப்பெற்று ஒளி