பக்கம் எண் :

338தணிகைப் புராணம்

 ஒளியிடை மூன்றாய் நின்ற வொளிமுத லொளியே போற்றி
 தெளிபுன னான்காய் நின்ற தெளிபுனன் முதலே போற்றி.

(இ - ள்.) ஆகாயத்தினிடத்துச் சத்தமாகிய குணவடிவமா யெழுந்தருளிய அவ்வாகாயத்திற்கு முதற்காரணமாகிய பரவெளியே வணக்கம். காற்றினிடத்து ஓசையுமூறுமாகிய இரண்டு குணவடிவமா யெழுந்தருளிய அக்காற்றினுக்கு முதற்காரணமாகிய மேலாகிய காற்று வடிவாயுள்ளோனே வணக்கம். தீயினிடத்து ஓசையூறொளியென்னும் மூன்று குணவடிவாயெழுந்தருளிய அவ்வத்தீயினுக்கு முதற்காரணமாகிய மேலான தீயின்வடிவமாயுள்ளவனே வணக்கம் : தெளிந்தநீரின்கண் சுவையொளியூறோசை யென்னும் நான்கு குணவடிவமாக வெழுந்தருளியுள்ள தெளிந்த நீரினுக்கு முதற்காரணமாயுள்ள மேலான நீர்வடிவாயுள்ளவனே வணக்கம்.

(52)

 படியிடை யைந்தாய் நின்ற படிமுதற் படியே போற்றி
 சுடரிரண் டாகி நின்ற சுடரினுட் சுடரே போற்றி
 உடலுயி ராகி நின்ற வுயிரினு ளுயிரே போற்றி
 தொடர்செயெண் பொருளு மெய்யாத் துன்னிய புராண போற்றி.

(இ - ள்.) மண்ணின்கண் சுவையொளியூறோசை நாற்றமென்னுமைங்குண வடிவமாக எழுந்தருளிய அம்மண்ணிற்கு முதற்காரணமாய மேலாகிய மண்வடிவாக வெழுந்தருளியவனே வணக்கம். ஞாயிறு திங்களென்னு மிரண்டு சுடர்களாகி யெழுந்தருளிய அச்சுடர்களுள்ளே விளக்கமுற்று (அவைகளுக்கு ஒளியை யளிக்கும்) மேலான சுடர்வடிவாயுள்ளவனே வணக்கம். உடலுமுயிருமாக வெழுந்தருளியிருந்து உயிர்களினுள்ளே (இருந்தியக்கும்) உயிர்க்குயிராகிய உயிரே வணக்கம். முறையாகக் கூறிவந்த எண்வகைப் பொருள்களுமறியாது இவைகளில் நிறைந்து நின்ற பழமையானவனே வணக்கம்.

(வி - ம்.) "வெளியிடை" யென்பது முதலாக "உயிரே போற்றி" என்பதீறாக அட்டமூர்த்த வடிவங் கூறியவாறு காண்க. தொடர்செய் - முறைப்படக்கூறிய. எய்யாதென்பது விகாரம். எய்யாது - அறியாமல். துன்னிய - (இவ்வெண் பொருள்களிலும்) நிறைந்த.

(53)

 முந்திய பொருள்க ளெல்லாம் பிந்தமுந் துள்ளாய் போற்றி
 பிந்துறு பொருள்க ளெல்லா முந்தப்பிந் துறுவாய் போற்றி
 மந்திரப் பொருள்க ளெல்லாம் வழுத்துமந் திரத்தாய் போற்றி
 வெந்திறற் படைக ளெல்லாம் வியத்தகும் படையாய் போற்றி.

(இ - ள்.) முன்னர்த் தோன்றிய பொருள்கள் யாவும் பிற்பட அநாதிக்காலத்தே யுள்ளவனே வணக்கம். பின்னர்த் தோன்றிய பொருள்கள் யாவும் முன்னரழிய பின்னரீறிலாதிருப்பவனே வணக்கம். (ஏனைய தேவர்களைக் குறிக்கும்) மந்திரத்தின் பொருள்கள் யாவும், துதிக்கும் மந்திரவடிவமாகவுள்ளவனே வணக்கம். வெவ்விய வலியோடுகூடிய படைகள் யாவும் அடக்கி நிற்கும் வேற்படையை யுடையவனே வணக்கம்.