பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்339

(வி - ம்.) மந்திரப்பொருள் - தேவர்கள். அவர்களைக் குறிக்கும் மந்திரங்களன்றித் தன்னைக்குறிக்கும் மந்திரவடிவமாயிருப்பவன் என்க. வியத்தகும் - அடக்கிநிற்கும்; ஆச்சரியப்படுமெனினுமாம்.

(54)

 பொருள்வளர் குணங்கண் மூன்றும் புரட்டுமெண் குணத்தாய் போற்றி
 வெருள்வளர் தொழில்க ளெல்லாம் விளிக்குமைந் தொழிலாய் போற்றி
 மருள்வள ரறிவு முற்று மாய்க்குமொள் ளறிவாய் போற்றி
 இருள்வள ரிச்சை சிந்து மிச்சைமிக் குடையாய் போற்றி.

(இ - ள்.) படைத்தல், காத்தல் முதலிய பொருள் வளர்தற்கேதுவாகிய சத்துவம், இராசதம், தாமத முதலிய முக்குணங்களையும் நீக்குகின்ற - தன்வயத்தனாதல் முதலிய எண்குணங்களையுடைவனே வணக்கம். அச்சம் வளர்தற் கேதுவாகிய செயல்களெல்லாவற்றினையும் கெடுக்கும் படைத்தல் காத்தல் முதலிய ஐந்தொழிலையுடையவனே வணக்கம். அஞ்ஞானத்தை வளர்த்தற்கேதுவாய அவாவினைக் கெடுக்கும் ஞானவிச்சை மிகுதியுடையவனே வணக்கம்.

(வி - ம்.) பொருள் வளர்குணம் - (படைத்தற்றொழில் முதலிய தொழில்களால்) பொருள் வளர்தற்கேதுவாகிய இராசதம், தாமதம், சத்துவம் என்னும் குணங்கள்.

(55)

 ஆணவ மூல மைந்து மலமெனு மிருளோ ராறும்
 ஏணறத் துமிப்ப வில்லிட் டிலகறு முகத்தாய் போற்றி
 பேணுறு திசைமேல் கீழும் பெருகிரு ஞான முய்ப்ப
 மாணுறு வதனந் தோறு மலரிரு விழியாய் போற்றி.

(இ - ள்.) ஆணவமலமும், ஆணவம், மாயை, கன்மம், மாயேயம், திரோதாயியென்னும் ஐந்து மலமுமாகிய ஒப்பற்ற அறுவகை யிருளினைச் சத்தி குன்றக்கெடுக்க ஒளியினை வெளியிட்டு விளங்குகின்ற ஆறு முகங்களையுடையவனே வணக்கம். யாவரும் விரும்பத்தக்க நான்கு திசையும், மேலும் கீழுமாகிய ஆறிடங்களிலும் அதிகரிக்க பரஞானம் அபரஞானமாகிய இருவகை ஞானங்களைச் செலுத்த மாட்சி பொருந்திய முகங்கடோறும் விரிந்த இரண்டு திருக்கண்களையுடையவனே வணக்கம்.

(வி - ம்.) ஆணவ மூல மென்பதனைப் பண்புத் தொகையாக்கி "பூதாதி" யென்பதுபோல அன்மொழித் தொகையாகக் கொள்க. ஏண் - வலி, ஈண்டுச் சத்தியின்மேற்று. வில் - ஒளி. இருஞானம் - பரஞானம் அபரஞானம். ஒவ்வொரு திக்கினுக்கும் இருஞானத்தையளிக்கும் பொருட்டே திருக்கண்கள் பன்னிரண்டாயின வெனக்கொள்க. ஆணவ மூலம் - ஆணவத்தை மூலமாகவுடையது. இஃதன்மொழித்தொகை. "பூதாதி" யென்னுஞ் சிவஞானபோத வுதாரணவெண்பாவானு முரையானுமுணர்க. ஆணவத்தை மூலமாகவுடைய ஆணவமலமும், ஆணவமும், மாயையும், கன்மமும், மாயேயமும், திரோதாயியும் என அறுவகை மலங்களென்பார் "ஆணவ மூலமைந்து மலமெனு மிருளோராறும்" என்றார்.

(56)