பக்கம் எண் :

340தணிகைப் புராணம்

 மலர்முகப் பரிதி யஞ்சி வான்கதி ரிராறுந் தாழ்வுற்
 றிலகுவ தென்னக் காதி னெரிமணிக் குழையாய் போற்றி
 அலர்கதிர் வதன வென்றூழ்க் கலர்ந்ததா மரைக ளென்னக்
 குலவிய தளிர்க்கை யுந்தி குரைகழற் பதத்தாய் போற்றி.

(இ - ள்.) தாமரை மலர்போன்ற திருமுகங்களாகிய சூரியனுக்கு அச்சமுற்று ஆகாயத்தின்கண் இயங்குகின்ற பன்னிரு சூரியருந் தாழ்வுற்று விளங்குவதைப்போலச் திருச்செவிகளில் ஒளிர்கின்ற மணிகள் பதித்த குண்டலத்தை யணிந்தவனே வணக்கம். கதிர்விரிந்த திருமுகமாகிய சூரியனுக்கு விரிந்த தாமரை மலர்களைப்போல விளங்குகின்ற திருக்கரங் களையும், திருவுந்தியையும், ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளையு முடையவனே வணக்கம்.

(வி - ம்.) என்றூழ் - சூரியன். உந்தி - கொப்பூழ்.

(57)

 தெறுதழற் பிணிகண் மண்ணுஞ் சிவகங்கை யானாய் போற்றி
 வெறிகமழ் கயிலைக் கங்கைத் தீர்த்தமாய் விரிந்தாய் போற்றி
 பிறவிதீர் ஞான சக்தி தரனெனும் பெயராய் போற்றி
 அறிஞர்சூழ்ந் தேத்துஞ் சீபூ ரணகிரிக் கதிப போற்றி.

(இ - ள்.) வருந்துகின்ற தீயினைப்போன்ற (மூழ்கினவர்) நோய்களைக் கழுவும் சிவகங்கை வடிவாக வெழுந்தருளியுள்ளவனே வணக்கம். வாசனையை வெளியிடுகின்ற கயிலையின்கண்ணுள்ள கங்கையின்வடிவாய் எங்கணும் நிறைந்துள்ளவனே வணக்கம். (ஆன்மாக்களுக்கு) பிறப்பை நீக்குகின்ற வேலைத் திருக்கரத்தில் தாங்கியுள்ளவனென்னும் திருப்பெயரினையுடையவனே வணக்கம். பேரறிவுடையார் பலருஞ் சுற்றித் துதிக்கும் தணிகைமலைக்குத் தலைவனே வணக்கம்.

(வி - ம்.) தெறுழ் - வருத்துகின்ற. மண்ணுதல் - கழுவுதல். இதனை "மண்ணிய" சென்ற வொண்ணுத லரிவை (292) என்னுங் குறுந்தொகைச் செய்யுளானறிக. ஞானசத்தி - வேல். வெறி - வாசனை. சீபூரணகிரி - தணிகைமலை.

(58)

 நயந்தெதிர் பழிச்சி நின்ற நந்தியை யுடலந் தைவந்
 துயங்கினை போலுஞ் சால வுயர்தவ முழந்தென் றையன்
 வியந்துநீ வேட்ட தென்னே விளம்புதி தருது மென்றான்
 முயங்கிய தவத்தான் மீட்டு முன்பணிந் திதனை வேண்டும்.

(இ - ள்.) விரும்பித் திருமுன்னர்த் தோத்திரஞ்செய்து நின்ற நந்தியெங்குரவனது உடம்பினைத்தடவி யுயர்ந்த தவத்தினையியற்றி மிக வருந்தினையெனத் திருவாய்மலர்ந்தருளி ஐயன் வியப்புற்று நீ விரும்பியது யாது சொல்வாய் தருவோமென்றான். ஒற்றுமைப்பட்டதவத்தையுடையான் மீண்டும் வணங்கி இதனை வேண்டுவானாயினன்.

(வி - ம்.) நந்தியது - வேற்றுமை மயக்கம். போலும் : அசை; இதனை "நெருப்பழல் சேர்ந்தக்கா னெய்போல் வதூஉம்" என்னும் நாலடிச் செய்யுளா னறிக. முயங்குதல் - ஒற்றுமைப்படல்.

(59)