கவணில் வைத்து வீசுகின்ற கற்களால் அழகிய பலாப்பழங்கள் தேன் கூட்டினோடு சிதைந்து வழிந்துகிடக்கும் வழுக்கு நிலத்திடத்து வாசனை பொருந்திய தாமரை மலர்போன்ற பாதங்கள் வழுக்குதலுறுதலால் விழுந்து வருந்துவார்கள். ஒருவன் ஒருபொருளினுக்குத் தீங்குகளை யிழைப்பானாயின் அத்தீங்குகள் செய்த அவனுக்குப் பிற்கணத்தின்கண் வந்து சேராவோ? சேரும். (வி - ம்.) ஒப்புதல் - ஒட்டுதல்; குலைந்திறால் - பெயரெச்சத் தீறுதொக்கது; 'புகழ்புரிந் தில்லிலோர்க்கில்லை' யென்றாற்போல; உருவ ஆசினி - அழகினையுடைய பலாப்பழம்; ஆசினி - ஆகுபெயர்; உருவம் - அழகு; 'உருவ வொண்கொடி யூழினுடங்குவ' என்னும் சிந்தா. நாமகள் 67-ஆம் பகுதியினுரையா னறிக; அசும்பு - சிறுதிவலை; 'அசும்பறாத நெற்றிய சேயுயர் மதில்வகை செப்புகின்றதே' என்னுஞ் சிந்தாமணி நாமகளிலம்பகம் (70) செய்யுளுரையானறிக. நான்காமடியின் கருத்தை "பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா பிற்பகற் றாமே வரும்" என்னுங் குறளா னறிக. உக்கனவாகி யசும்பின நிலமென முடிவு செய்க. இது வேற்றுப் பொருள்வைப்பணி. (44) | | ஆழ்ந்த நீரல காதிக ளளித்திடப் படுவ | | | வாய்ந்ந மாமணி யாதிய வயின்றொறு மிறைவ | | | தாழ்ந்த வாயினு மரியவே லுயர்ந்தவாய்த் தகையும் | | | வீழ்ந்த வாயினு மெளியவேற் றாழ்ந்தவாய் விடுமே. |
(இ - ள்.) ஆழமாகிய கடலின்கட் பிறந்த பலகறை சங்குமணி முதலியவைகள் அந்நில மக்களாற் சேமித்துப் பாதுகாக்கப்படுவனவாம்; அந்நிலத்திற் பொருந்திய பெரிய வயிர முதலியனவாகிய இரத்தினங்களிடங்கடோறும் சிந்திக்கிடப்பனவாம். இழிந்தனவாகிய பொருள்களாயினும் கிடைத்தற்கு அரியனவாயின் உயர்ந்தனவாகிப் பெருமையுறும். யாவராலும் விரும்பப்படுவனவாகிய பொருள்கள் எளிதிற் கிடைப்பனவாயின் இழிந்தனவாகி விடும். (வி - ம்.) அளித்திடப்படுவ - காக்கப்படுவன; தகையும் - பெருமையுறும்; 'தகையென்ப தழகுபண்பு தயையொடு பெருமை நாற்பேர்' என்னும் நிகண்டானறிக; வீழ்ந்த - விரும்பிய; இறைவ - சிதறுவ; தங்குவன வெனினுமாம்; இதுவும் மேலையணி. (45) | | கொழுவி டைக்கறை விராவிய பலிக்குறை நிரப்பி | | | வழுவில் பல்பிரப் பிரீஇவெறி யாட்டயர் மன்றத் | | | தொழுகு பல்லிய வோதையு முரவுவெள் ளருவி | | | இழுமெ னோதையு மெழுகட லவியினு மவியா. |
(இ - ள்.) கொழுவிய கிடாயினது இரத்தங் கலந்த முருகர்க்கு இன்றியமையாத வெள்ளரிசியை நிறையச் செய்து, குற்றமில்லாத பேருண்டியையும் படைத்துக் குறமகளிர் முருகனை ஆற்றுப்படுத்தற்கு வெறியாட்டைச் செய்கின்ற ஊர்க்கு நடுவேயுள்ள மரத்தடியின்கண் வரிசையா யெழுகின்ற பல வாத்தியங்களினோசையும், வலியோடுகூடிய வெள்ளிய அருவியிழிதலானுளவாகிய இழுமென்னு மோசையும் அலை யெழுகின்ற கடலோசை யடங்கினு மடங்காவாம். |