பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்35

(வி - ம்.) விடை - கிடாய்; இதனை 'மாத்தாட் கொழுவிடை' என்னுந் திருமுருகாற்றுப் படையா னுணர்க. பலி - அரிசி; 'சில் பலிச் செய்து பல்பிரப்பிரீஇ' (முருகு 234) குறை இன்றியமையாமைப் பொருட்டு; பிரப்பு - பேருண்டி. 'பிரப்பென்றுரைப்பது பேருண்டியாகும்' என்னும் பிங்கலந்தையா னுணர்க; இனி குறுணி யென்னுமளவைக் கொண்ட பாத்திரங்களில் பல்லுணாக்களைப் பரப்பிவைத்தல் பிரப்பென்பாருமுளர்; அவர் "குறுணி யொவ்வொன்றதாகக் கொள்கலம் பல்லுணாக்கள் பெறுமுறை பரப்பிவைப்ப பிரப்பெனப் பேசலாமே" என்னும் நிகண்டினை மேற்கோளாகக் காட்டுவர்; இனி யாசிரியர் நச்சினார்க்கினியர் பிரப்புக் கூடையுமா மென்பர்; மன்றம் - ஊர்க்கு நடுவேயுள்ள மரத்தடி; ஒழுகு - வரிசை; எழுகடல் - வினைத்தொகை; ஏழு கடலெனினுமாம்; இழுமென்னோதை - அநுகரண வோசை.

(46)

 தேனுஞ் செந்தினை யிடிகளுந் தீஞ்சுவைக் கனியு
 மூனுந் துய்ப்பன வுடுப்பன மரவுரி தழைகள்
 வானுந் தோய்சுனை யாடுவ மணிவரை யிருப்ப
 ஏனஞ் சூழ்ந்தகுன் றவர்க்கொரு நல்குர வின்றே.

(இ - ள்.) அக் குறிஞ்சிநில மக்களா லுண்ணப்படுவன கோற்றேனும் செவ்விய தினைமாவும்; இனிய சுவையையுடைய கனிகளுமாம்; உடையாக உடுக்கப்படுவன மரத்தினின்று முரிக்கப்பட்ட பட்டையும் தழைகளுமாம்; ஆடப்படுவன தேவர்களும் வந்து தோயும்படியான சுனைநீராம்; இருக்கப்படுவன அழகிய மலைகளாம்; ஆகையினாற் றினைப் புனத்தாற் சூழப்பட்ட மலைவாணர்க்கு ஒருவகையான வறுமையுமின்றென்க.

(வி - ம்.) வான் - இடவாகுபெயர்; அக் குறிஞ்சிக்கண் வாழ்வார்க்கு பொருட் செலவின்றி யெப்பொருளும் எளிதினகப்படுமென்பார் ஒரு நல் குரவின்றென்றார்; ஏனம் - ஆகுபெயர்; இனி ஏன மென்பதனைப் பன்றியெனப் பொருள் கொள்வாருமுளர். வானுமென்னு மும்மை சிறப்போடெச்சம்; நல்குரவும் என்னும் முற்றும்மை விகாரத்தாற் றொக்கது.

(47)

 அன்பி னைந்திணைக் களவலாற் களவொன்று மறியார்
 இன்ப மாண்பிரி வினைவலா லினைவொன்று மெய்தார்
 துன்ப மோட்டுவாய்ப் பொய்யலாற் பொய்யொன்றுஞ் சொல்லார்
 முன்பு மாதவப் பயத்தினா லவண்முயக் கமர்வார்.

(இ - ள்.) முன்னர்ச் செய்த தவத்தின் பயனால் அக்குறிஞ்சி நிலத்தின்கட் கூடுதலைப் பொருந்திய குன்றவாணர்கள், அன்பு காரணமாக ஐந்திணையின்கணிகழும் களவெனுங் கைகோளன்றிக் கைக்கொளும் வேறு களவொன்றினையு மறியாராவார்; இன்பமானது மேன் மேலுமதிகரித்தற்குக் காரணமாக நாயகன் நாயகியைப் பிரியும் பெருமை பொருந்திய பொருள்வயிற் பிரிவாலுளதாந் துன்பினையன்றி வேறு துன்பினையறியார்; தலைவியர்க்குத் துன்பத்தினை நீக்குகின்ற வாயாற் கூறும் பொய்பாராட்டலையன்றிப் பிறர்க்குத் தீங்கு பயக்கத்தக்க வேறு பொய் யொன்றினையுஞ் சொல்லார்.