பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்345

 பெரும்புன றழுவும் பெற்றி பெட்டுவீ டாடு வோர்பால்
 பொரும்பரி சறவேள் செங்கைப் போர்ப்படை பறித்த தொக்கும்.

(இ - ள்.) வண்டுகள் கணுக்களினின்றும் சிந்திய தேனையுண்டு ஒலித்து மொய்க்கும் கரும்புகளினோடும், அசோகமலரையும், மாமலரையும், தாமரைமலரையும், நீலோற்பல மலரையும், முல்லைமலரையும், மிக்க இந்நீர் தழுவிச் செல்லுந்தன்மையானது வீட்டினை விரும்பித் தன்னிடத்து மூழ்குவோர்மாட்டு மன்மதன் போர்செய்யுந்தன்மை நீங்க அவ்வேளின் செங்கையின்கண்ணுள்ள போருக்குரிய பாணங்களைப் பறித்ததை யொக்கும்.

(வி - ம்.) கண் - கணு. பெற்றி - தன்மை. வீடு பெட்டு என மாற்றுக. ஆடுவோர் - (தன்மாட்டு) மூழ்குவோர். பெற்றி ஒக்கும் எனக் கூட்டுக.

(71)

 தத்துவ வமிர்த மென்னுந் தற்பரந் தீர்த்த மாயும்
 தத்துவ வமிர்த நாமந் தரித்தெனக் கொன்றை தும்பை
 மத்தம்வெள் ளெருக்கடம்பு வன்னிபா சறுகு கோடென்
 றித்திற வணியு முன்போ லிசைந்துருக் கவினத் தோன்றும்.

(இ - ள்.) உண்மையாகிய மோட்ச வடிவமென்று சொல்லும் அச் சிவந் தீர்த்த வடிவாகியும், தத்துவ வமிர்தமென்னுந் திருநாமத்தினைத் தரித்துள்ளதென்று சொல்லும்வண்ணம், கொன்றைமலரும், தும்பை மலரும், ஊமத்தமலரும், வெள்ளெருக்கமலரும், அடம்பமலரும், வன்னியிலையும் பசியவறுகம்புல்லும், பன்றிக்கொம்புமென்று சொல்லத்தக்க இத்தகைய வணியினை முன்போலணிந்து திருவுருவழகினை யுடைத்தாகத் தோன்றா நிற்கும்.

(வி - ம்.) அடம்பு - நெய்தனிலக்கருப்பொருள்களு ளொன்று. கோடு - பன்றிக்கொம்பு. தற்பரம் - சிவம்.

(72)

 காத்தலை மருவ லானுங் கடிதடந் தோற்ற லானும்
 பூத்தலை மலைத லானும் போகமும் புணர்த்த லானும்
 ஏத்துவிண் ணவருந் தாழ வின்னிசை யெழுப்ப லானும்
 கூத்தொடு மியற லானுங் கூத்தியர் புரையும் வாரி.

(இ - ள்.) (இருபொருள் சிலேடை) நதி, காத்தற்றொழிலைப் பொருந்துதலானும், வாசனையுடைய தடாகங்களிற்றான் பொருந்துதலானும், அலைகடோன்றி யொன்றினோடொன்று மோதுதலானும் அனுபவிக்கப்படும் பொருள்களைச் சேர்த்தலானும், யாவருந்துதிக்கின்ற தேவர்களும் தாழும்வண்ணம் இனியவோசை யெழுப்புதலானும் நடித்தலோடு செல்லுதலானும், நாடகமாதரை யொக்கும்.

(வி - ம்.) சோலைபோன்ற கூந்தல் பொருந்தி நிதம்பத்தினைத் தோன்றச்செய்து பூக்களைத் தலையிற்சூடி (விரும்பினார்க்கு) இன்பத்தினைச் சேர்த்து யாவருந் துதிக்கும் தேவர்களும் வணங்க இனிய இசைப் பாட்டினைப் பாடிக் கூத்தினோடு பொருந்துதல் கூத்தியர் தொழிலென்க.