பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்349

இறைவன் : - சந்திரன் கலைகள் நாளுக்குநாள் வளருமழகைத் தன்னிடத்துக்கொண்டு திருக்கரத்தில் மேருமலையாகிய வில்லினை யேந்திப் புவனங்களெல்லாம் இல்லையாம்படி செய்யுஞ் சங்காரத்தொழிலைப் பொருந்தியதால் எனப்பொருள் கொள்க.

கலை - சந்திரகலை. மலை - மேருமலை. நிலன் இலையாகுந் தோற்றம் - சங்காரத்தொழிலின் விளக்கம்.

திருமால் : - கலைமான் போன்ற மருண்ட பார்வையையுடைய இலக்குமியின் அழகின் வளத்தைத் தன்பாற்கொண்டு ஒளியோடுகூடிய பாற்கடலிற்றங்கி உலகம் நிலைபெறும்படியான காத்தற்றொழில் பொருந்து கின்றமையால் எனப்பொருள் கொள்க.

கலை - ஆகுபெயர். வளம் - அழகு. கரம் - ஒளி - ஈண்டுப் பாற்கடல். கரமலையிருத்தலென்பதற்குக் கையின்கட் கோவர்த்தனகிரியைக் குடையாகக்கொண்டெனப் பொருள் கொள்ளினும் பொருந்தும்.

அகத்தியன் : - நூல்களின் பொருள் வளங்களையெல்லாம் தன்னகத்துக்கொண்டு கையினால் விந்தமலையைக் கீழிருக்கச்செய்து உலகஞ் சமனிலையடையுந்தன்மை பொருந்தியுள்ள சம்பத்தோடுகூடியதால் எனப் பொருள் கொள்க.

கலை - கல்லை, இடைக்குறை. கரமலை - யானை. நிலன் நிலையாகுந் தோற்றம் - நிலைபெறும்படியான கூட்டம்.

(77)

 இனையபல் வளத்தி னோடு மியங்குநீர் நதியை நோக்கி
 வனைபுகழ்க் கடப்பந் தாரான் மலரவிழ் கடைக்கண் வெள்ளம்
 நனைதர வெதிர்நின் றானை நனைநதி யாடு கென்றான்
 வினையிகு நந்திப் புத்தேன் விதியுளி யதன்கட் டோய்ந்தான்.

(இ - ள்.) இத்தன்மைத்தாகிய பற்பல வளத்தினோடு செல்லுகின்ற நதியினைப்பார்த்து யாவருமலங்கரித்துக் கூறும் புகழினையுடைய கடப்பமாலையை யணிந்த முருகக்கடவுள், தாமரை மலர்போல விரிந்த கண்ணின் கடைவழி யொழுகுகின்ற ஆநந்த வெள்ளத்தால் உடல்நனைய வெதிர்நின்றானாகிய நந்தியினை மலர்களோடுகூடிய நதியின் கண்ணே மூழ்குகவென்று திருவாய் மலர்ந்தருளினான். வினை நீங்கிய நந்திதேவன் விதியோடு அந்நதியின்கண் மூழ்கினான்.

(வி - ம்.) நனை - மலர். இகும் - நீங்கும். உளி : மூன்றாவது கருவிப் பொருள்.

(78)

 கொடுங்குழை மகளிர் கொங்கைக் குங்கும வளறு போல
 இடுங்களி பாங்கர்த் துன்ன வெழுநதி தோய்ந்த நந்தி
 அடங்கரும் பிறவிப் பௌவ மதினின்று மேறு கின்றான்
 தடங்கரை யேறி யுள்ளந் தழைத்தெழு மகிழ்ச்சி கொண்டான்.

(இ - ள்.) வளைந்த காதணியையுடைய பெண்களின் கொங்கைக் கட்டிமிர்ந்த குங்குமச் சேறுபோல இடப்பட்ட எக்கர் பக்கத்திலே பொருந்த எழுகின்ற நதியின்கண்ணே மூழ்கிய நந்தியெம்பெருமான்