பக்கம் எண் :

350தணிகைப் புராணம்

அளவிலடங்குதற் கருமையாகிய பிறவிக்கடலினின்று மேறுகின்றவனைப் போலப் பெருமை பொருந்திய கரையின்கணேறி உள்ளத்தின்கட்டழைத் தெழுகின்ற மகிழ்ச்சியினை மேற்கொண்டான்.

(வி - ம்.) களி - எக்கர். ஏறுகின்றான் - ஏறுகின்றவனைப் போன்று, முற்றெச்சம். ஏறுகின்றானென்பதை ஏறுகின்றவன் மகிழ்ச்சிகொண்டானென
முடிப்பினுமமையும்.

(79)

 வம்பணி முலையி னாரு மாழையு மண்ணு மெல்லாம்
 வம்பெனக் கடந்த நந்தி யின்னண மகிழ்ந்த வாற்றால்
 வம்பவிழ் மலரும் பொன்னு மணிகளு மணிந்து செல்லும்
 வம்பெழு நதிப்பேர் நந்தி நந்தினி யென்ப மாதோ.

(இ - ள்.) கச்சினையணிந்த தனங்களையுடைய பெண்களும், பொன்னும் மண்ணுமாகிய மூன்றும் நிலையுடையனவல்லவென்று அவைகளை நீக்கிய நந்தியங்கடவுள் இவ்வாறு மகிழ்ச்சியுற்ற காரணத்தான் வாசனை விரியப்பெற்ற மலரினையும், பொன்னையும், இரத்தினங்களையும் வாரியலங்கரித்துச் செல்லும் புதிதாகத்தோன்றும் நதியின் பெயர் நந்தி நந்தினியாமென் றுயர்ந்தோர் சொல்லுவர்.

(வி - ம்.) வம்பு - கச்சு, நிலையின்மை, வாசனை, புதுமை. மாழை - பொன்.

(80)

வேறு

 நெஞ்சந் தூய நிறைதவ நந்திபின்
 மஞ்ச னைத்தணி கைப்பதி வள்ளலைக்
 கஞ்சம் வென்ற கழலிணை தாழ்ந்தெழீஇ
 விஞ்சு மன்பின் விளம்புதன் மேயினான்.

(இ - ள்.) நிறைந்த தவத்தினோடு தூய்தாகிய அழகிய மனத்தினையுடைய நந்தியெங்குரவன் பின்னர்ச் சிவகுமாரராகிய தணிகைப்பதி யின்கணுள்ள வரையாது கொடுக்கும் வள்ளற்றன்மையுடைய முருகக் கடவுளது தாமரை மலரினைவென்ற இரண்டு திருவடிகளிற் றாழ்ந்தெழுந்து மிக்கெழுமன்பினாற் சிலமொழிகள் சொல்லத்தொடங்கினான்.

(வி - ம்.) வள்ளலது, கழலிணைகளில் வேற்றுமை மயக்கம்.

(81)

 மூவ ருக்கரி யாயருண் மொய்ம்பினால்
 தேவ ருக்கரி தாந்திருப் பெற்றுளேன்
 ஓவி லின்பவு ததிய ழுந்திய
 தாவி லுண்மையி னித்தரத் தாங்குவல்.

(இ - ள்.) அயனரியரனென்னு மூவருக்கு மருமையானவனே பெருமான் திருவருளின் வலியான் தேவர்களுக்கும் எய்தற்கருமையாகிய செல்வமடைந்துள்ளேன். ஒழிவில்லாத இன்பக்கடலின்கண் மூழ்கக் கெடுதலில்லாத உண்மைப் பொருளினுபதேசத்தை இனிப் பெருமான் என் செவியறிவுறுக்கப் பெறுவேன்.