| | இனாத நூலின ரியம்புவ பலதிற மெண்ணில் | | | கனாவெ னத்தலை மயங்குவ கழிகசை வத்த | | | மனாதி யாலறி வரியன நிறைவின வலிய | | | அனாதி சத்திநித் தியத்தன வைந்துமெய்ப் பொருளே. |
(இ - ள்.) நந்தியே! துன்பினைத் தருவனவாய (முக்கூற்றுப்புறச் சமயத்தவராலும், தங்கள் தங்கள் மதநூலறிவு கொண்டு) சொல்லப்படுவன வாகிய பெத்தமுத்தியி னிலக்கணங்கள் பலவகையாம். (காட்சி, கருதல், சத்த முதலிய அளவைகளான் அவற்றை) ஆராயின் கனவுக் காட்சியினைப்போல முன்னொடுபின் மயங்க மொழிவனவாம். ஆகலான் அவைகிடக்க (காமிக முதல் வாதுள மீறாகக்கிடந்த 28 சிவாகமங்களிற் கூறப்படுவனவாய், பாசஞான பசுஞானங்களா லறிதற்கரியனவும், செறிந்த வியாபகத்தையுடையனவும், வன்மையையுடையனவும் அனாதியாகிய சத்தியோடு நிலைபேறுள்ளனவுமாகிய இந்நான்கிலக்க ணங்களையுடைய ஐந்து பொருள்களும் உண்மைப் பொருள்களேயாம். (வி - ம்.) இனாதநூல் - புறச்சமயநூல். மனாதி - பசுஞானம், பாசஞானம். இதனை "மாற்ற மனங்கழிய நின்றமறையோனே" என்னுந் திருவாசகத்தானறிக அரியன, நிறைவின, வலியன, நித்தியத்தனவாகிய நால்வகை யிலக்கணம். மெய்ப்பொருள் - உள்பொருள். (89) | | பதியு மப்பதிக் கடிமையாம் பசுவுமப் பசுவின் | | | முதிரு மாணவப் பகையுமம் முழுப்பகை துமிப்பக் | | | கதிய மாயையுங் கருமழு மெனப்படு மவைதாம் | | | மதியு ளோர்கள்பின் னிரண்டையு மலத்தொடு மொழிவார். |
(இ - ள்.) அம்மெய்ப்பொருளாகிய அவைகள் பதிப்பொருளும், அப்பதிப் பொருளுக்கென்று மீளாவடிமையாகிய பசுப்பொருளும், அப்பசுப்பொருளிடத்து (செம்பிற் களிம்புபோல நாளுக்குநாள் அறிவை மறைத்து) முதிர்கின்ற ஆணவமலமாகிய பகைப்பொருளும் (அநாதியாகத்தொடர்ந்த) ஆணவமாகிய வயிரமுற்ற பகையினை நீக்கவடைந்தமாயாமல மாகிய பொருளும் கருமப்பொருள்களுமென்று சொல்லப்படுவனவாம். பதிநூலுணர்விற் கூர்த்துச்சென்ற நுண்ணறிவினையுடைய பெரியார் (ஆகந்துகமாகிய) மாயை கன்மமென்னு மிரண்டனையு மாணவ மலத்தோடகப்படுத்துக் கூறுவார்கள். (வி - ம்.) ஆணவமலம் முதிர்ந்து நீங்குமாறு மாயாமலத்தையும் கன்ம மலத்தையு மிறைவன் இயைவித்தலின் "அம்முழுப்பகை துமிப்பக்கதிய மாயையுங் கருமமு" மென்றார். மாயா மலத்தையுங் கன்ம மலத்தையு மலமென வொன்றாக்கி ஆணவமலமொன்றே யென்பா ரொருசாராரென்பது தோன்ற "மதியுளார்கள் பின்னிரண்டையு மலத்தொடு மொழிவா" ரென்றார். (90) | | அறிந்து யிர்க்கறி விப்பது பதியறி வித்தால் | | | அறிந்து நிற்பது பசுவது சிவத்தடை யாமைச் | | | செறிந்து வையகத் துய்ப்பதா ணவந்திரள் கருவித் | | | துறந்த மாயைமற் றூணது பஃறிறக் கருமம். |
|