பக்கம் எண் :

362தணிகைப் புராணம்

 மொய்த்தமூ வாறு புராணமூ விருசாத்
           திரமறு பத்துநாற் கலையும்.

(இ - ள்.) சுத்த தத்துவமாகிய சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை யென்னு மைந்து தத்துவங்களையும், பரை, பைசந்தி, மத்திமை, வைகரியென்னும் நான்கு வாக்குக்களையும், அவ்வாக்கின் காரியமாகக்கூடிய அகரமுதல் க்ஷகரமீறாகிய ஐம்பத்தொரு அக்கரங்களும், நம, சுதா, சுவகா, ஷட், வௌஷட், பட், உம்பட் என்னும் இறுதிகளினாலே ஏழு கோடியாகச் சொல்லப்படும் மகா மந்திர வேறுபாடுகளையும், உண்மைப் பொருளினைக் கூறுகின்ற நூலாகிய காமிக முதல் வாதுள மீறாகிய இருபத்தெட்டு மூலாகமங்களையும் அவைகளின் வழித்தாய்த் தோன்றிய நாரதீய முதல் விசுவான்மகமீறாய இருநூற்றேழு உபாகமங்களையும், பல சாகைகளாகவிரிந்த இருக்கு, யசுர், சாமம், அதர்வணமென்னும் நான்கு வேதங்களையும், அவ்வவ்வேத சாகைகளின் பொருள்களை எடுத்து விளக்கும் உபபிருங்கணங்களாயுள்ள பிரமமுதல் பிரமாண்ட மீறாகிய பதினெண் புராணங்களையும், சிக்ஷை, வியாகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கற்பமென்னும் ஆறு சாத்திரங்களையும், எழுத்திலக்கண முதல் அவத்தைப் பிரயோகமீறாகிய அறுபத்து நான்கு கலைகளையும்.

(107)

 மேதகு சிவமே சத்தியே நாதம் விந்துவே சதாசிவ மகேச
 பேதமே யரனென் றிவர்க்கும்விஞ் ஞான கலரொடு பிரளயா கலர்க்கும்
 தீதறு சரியை கிரியையோ கத்திற் செறிந்தவர் தமக்குநற் றனுக்கள்
 ஒதுறு கரண புவனபோ கமுமைங் கலையுமற் றுயிர்ப்பது சுத்தம்.

(இ - ள்.) மேன்மை பொருந்திய சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவம், மகேசபேத மிருபத்தைந்து, அரன் என்று கூறும் எழுவகைச் சிவபேத வடிவங்களைத் தியானித்து அச்சிவபேத வடிவங்களுடனே எழுந்தருளி யிருக்கும், அபரமுத்தர்களுக்கும், விஞ்ஞானகலருடனே பிரளயாகலர்களுக்கும், குற்றமற்ற உண்மைச்சரியை, உண்மைக்கிரியை, உண்மையோகம் என்னும் நெறிகளில் வழுவாது நின்றவர்களுக்கும், நல்ல திருமேனிகளையும், அவற்றிற்குச் சொல்லப்பட்ட கருவிகரணங்களையும், புவனங்களையும் போகங்களையும், அப்போக நுகர்விற் செலுத்துகின்ற சிவசத்தி நிற்றற்குரிய தானங்களாகிய சாந்தியாதீதை, சாந்தி, வித்தை, பிரதிட்டை, நிவர்த்தியென்னும் ஐந்து கலைகளையும் பிறவற்றையும் தோற்றுவிப்பது சுத்தமாயையாம்.

(108)

 காலமே நியதி கலையொடு வித்தை கதித்தெழு மராகமே புருடன்
 சாலநா லாறு தத்துவந் தன்பாற் றரும்பிர கிருதியோ ரேழும்
 மாலயன் வலாரி தேவர்கண் முதலா மன்னிய சகலருக் கெல்லாம்
 கோலநற் றனுக்க ளாதிய நான்குங் கொடுப்பதா லசுத்தமா மாயை.

(இ - ள்.) இனி அசுத்தமாயையானது, காலம், நியதி, கலையொடுவித்தை, இச்சை யெழுதற்குக் காரணமாகிய அராகம், புருடனென்னுந் தத்துவங்களுடனே இருபத்துநான்கு தத்துவங்களையுந் தன்னிடத்து நின்று தோற்றுவிக்கும் பிரகிருதி தத்துவமாகிய ஏழினையும் திருமால்,