பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்37

யுயர்ந்த மோட்டிடமாகிய பாலையிடம்; "முல்லையுங் குறிஞ்சியு முறை மையிற்றிரிந்து நல்லியல்பழிந்து நடுங்கு துயருறுத்துப், பாலையென்பதோர் படிவங் கொள்ளும்" (சிலப். 11,64) என்பவாகலின் தொகுமுரப்புச் சூழல் என்றார்; பகைக்கண் - பகையாகிய விழியென்பாருமுளர்.

(50)

 வரையுறை கடவுளா மகனை நீங்குதற்
 கருமையி னடுத்தமை யறையுஞ் சண்டிகை
 கிரியினுங் கிரிபுறங் கெழீஇய கானினும்
 பெரிதுமாம் பாலையம் பிராட்டி யாயதே.

(இ - ள்.) துர்க்கையானவள் குறிஞ்சி நிலத்தினும் அக்குறிஞ்சி நிலத்தின்புறத்தே பொருந்திய முல்லைநிலத்தினு மிகுதியுமுள தாகும் பாலைக்குத் தெய்வமாயிருக்குந்தன்மை குறிஞ்சிநிலத்திற்குத் தலைவராக வாண்டுறைகின்ற முருகக்கடவுளாகிய குமாரனைவிட்டுப் பிரியமாட்டாமையின் ஆண்டுப் பொருந்தியிருத்தலை யறிவிக்கும்.

(வி - ம்.) சண்டிகை - துர்க்கை; உமையின் கூறாதலின் மகனென்றார்; கிரி ஈண்டுக் குறிஞ்சிநிலம்; கான் - முல்லைநிலம்; ஏனைய நெய்தலினும் மருதத்தினும் பாலை உளதாயினும் இக்குறிஞ்சியினும் முல்லையினுமிக்குளவா மென்பது நூற்றுணிபாகலின் 'பெரிதுமாம்பாலை' யென்றார், அறையும் - இலக்கணை; 'ஐம்பானிகழ் பொழுதறை வினையிடைநிலை' யென்றாங்குக் கொள்க.

(51)

 தூதுணம் பறவைக டூதுண் டோவறக்
 காதலந் துணையொடு கழுமிப் புல்லுவ
 வேதுண வுண்ணினு மெவர்க்கும் வேள்கணை
 தீர்திற மரிதெனத் தெளிப்ப போன்றன.

(இ - ள்.) பருக்கைக் கற்களை யுணவாக உண்கின்ற அழகிய பாலைக் கருப்பொருளாகிய புறவினங்கள் வேறுணவின்மையின் ஆண்டுக்கிடக்கின்ற பருக்கைக் கற்களையே யுணவாக வுட்கொண்டு நீங்குதலின்றி அன்பிற்குரிய அழகிய பெண்புறவினத்தோடு மயக்கமுற்றுத்தழுவுவன; உணவாக சருகுநீர் காற்று முதலியவைகளில் எதனையுட்கொள்ளினும் எத்துணைப் பெரியராகிய மனனசீலர்க்கும் மன்மதபாணத்தினாலுளதாந் துன்பத்தினின்றும் நீங்கும் வகை யருமையுடைத்தென்று தெரியச் செய்வன போன்றனவாம்.

(வி - ம்.) தூது - பருக்கைக்கல்; கழுமல் - மயங்கல்; "பூத்துகள் கழுமிய பொலிவின தொருபால்" என்னுஞ் சிந்தாமணி நாமகளிலம்பகம் செய்யுளுரையா னுணர்க; உண வேதுண்ணினு மென மாற்றுக; எவர்க்கும் உம்மை உயர்வு சிறப்பு; தீர்திறம் - நீங்கும்வகை; வேள்கணை: ஆகுபெயர்.

(52)

 எயிற்றிய ரிளமுலை யிணைய வெண்ணுபு
 வெயிற்றலை மாதவம் விளைத்தல் வீழ்வன
 பயிற்றிய தெனநிறம் பரந்த மெல்லிதழ்க்
 குயிற்றிய தெனமுகைத் தெழுந்த கோங்கமே.