பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்375

கரணங்களோ?மாயையின் விரிவாய காரியங்களின் கூட்டமோ இவைகளுள் வைத்து எது உணர்தலைச் செய்வதாகிய உயிரென்று வருந்தா வண்ணம் நீ அவைகளின் வேறாய் அதுவதுவாய்த் தங்கியுணரும் பருப்பொருட்டாகிய அறிவு வடிவமென் றுணர்த்தியருளிய மிக நுண்ணிதாகிய எல்லாவறிவுமாய் விளங்குந்தன்மை வணங்கத் தக்கது.

(வி - ம்.) தாழ்தல் - அதுவதுவாகக் கலத்தல். போதம் - அறிவு.

(133)

 கேவல சகல சுத்த முயிரெலாங் கெழுமு மென்றும்
 தாவரு மாயை யில்லா ரிருதிறத் தார்க ளென்றும்
 ஆவயின் மாயை யின்றி யடாவிரு கரும மென்றும்
 மேவர விதித்து மாலா விழுத்தகு வாய்மை போற்றி.

(இ - ள்.) உயிர்வருக்கங்களெல்லாம் கேவலநிலை, சகலநிலை சுத்த நிலை என்னுங் காரணநிலை மூன்றினையு மடையுமென்றும், அவ்வுயிர் வருக்கத்தினுள்வைத்து குற்றமிலவாகிய மாயாமல மிலராவர் விஞ்ஞானகலர், பிரளயாகலரென்னும் இருபகுப்பினரென்றும், அவ்விடத்து அன்னார்க்கும் மாயாமலமின்மையால் அதுகாரணமாகத் தோன்றும் இரு வினைகளும் வந்து பொருந்தமாட்டாவென்றும் (அளவைகளானும், பொருந்து மாற்றானுமாராய) பொருந்துமாறு திருவாய்மலர்ந்தருளிய முன்னொடுபின் மயங்கவிடாத உயரிய முற்றறிவாகிய உண்மைத் தன்மை வணங்கத்தக்கது.

(வி - ம்.) இவ்விருதிறத்தார்க்கும் மாயையிலவாதற்கும் உளவாதற்கும் காரணம் அது காரணமாக வருகின்ற மயக்கமும், அம்மயக்க நிகழ்தற்கேதுவாய உடம்பு முண்மை விளக்கிய "மாலா விழுத்தகும் வாய்மை போற்றி" என்றார். மாலா - மயங்காத.

(134)

 சாக்கிர வவத்தைக் குள்ளாஞ் சகலத்தி லென்னை யன்னோ
 ஆக்கிடுந் தோறு நீங்கி யடரிருட் கேவ லத்தின்
 வீக்குறும் பிழையுட் கொண்டு விடாதுளஞ் சலியா மீட்டும்
 காக்குமத் தோலாச் சூழ்ச்சி கைக்கொளுங் காதல் போற்றி.

(இ - ள்.) கருவிகளுடனின்றுணருஞ் சாக்கிரநிலையின்கட் பொருந்திய சகலநிலையில் ஐயோ! அடியேனை இயைவிக்குந்தோறும் அந்நிலையினீங்கி, பம்பிய இருள்வடிவமாகிய கேவல நிலையின்கட் கட்டுண்ணும் பெரும்பிழையினை அறிந்தும் கைவிடாது. திருவுள்ளம் இரக்கத்தினின்றும் வேறுபாட்டினையடையாது மென்மேலும் அச்சகலநிலை, சாக்கிரநிலைகளிற் பொருந்திக் காத்தலைச் செய்யும் அத்தகைய குறைவற்ற உபாயத்தைத் தனதிச்சையாகக் கொண்ட நிறைவெனப்படும் விருப்பம் வணங்கத் தக்கது.

(135)

 வினைத்திற மூளூ மாறு மெலியுமென் மெலிவை யாற்றி
 அனைத்துக ளனுங்கு மாற்றா னறிவுறுத் தனைத்து மாற்றிக்
 கனைத்துவண் டிமிருந் தேந்தார் கமழ்மலர்க் கமல பாதம்
 நினைத்துறும் வாழ்வு தந்த நின்மலக் கொழுந்து போற்றி.