பக்கம் எண் :

நந்தி யுபதேசப் படலம்377

 என்றரு ளெழுத்தின் பேத மிசைத்துறு முறையுங் காட்டி
 நன்றெனக் கருளி யாண்ட நலத்தகு பெருமை போற்றி.

(இ - ள்.) (தன்னுண்மை யெனப்படும்) பொருந்துகின்ற கேவலநிலையிலே வருந்துதற்குக் காரணமாகிய ஐந்தெழுத்தெனவும், சகல நிலையிலே திரோதானம், மலம் என்னுமிரண்டு மாறிப் பின்னிடத்தமைந்த ஐந்தெழுத்தெனவும், சிவஞானமுதிர்கின்ற சுத்தநிலையிலே கேவலத்தின்கண் முன்னின்ற திரோதம், மலம் இரண்டும் நீங்கச் சகல நிலைக்குக் கூறிய ஐந்தெழுத்தெனவும் (இங்ஙனம்) அருள்விளங்கும் (குறிவடிவாகிய) ஐந்தெழுத்தின் வேறுபாட்டினையும் (அவற்றை அவ்வந்நிலைகளில் நிற்கு நிலைமையினுக்கேற்ப) மாறி மாறி ஒலிக்கு முறைமையினையு முணர்த்தி நன்றாக எளியேனுக்கு அருளினைச் செய்து அடிமைகொண்ட நன்மை பொருந்திய பெருந்தன்மை வணங்கப்படுவது.

(139)

 யானென தென்ன நின்ற விருண்முழு திரித்திட் டெல்லாம்
 தானென வென்னை வல்லே தன்னடி யிருத்திப் பொன்முன்
 மீனென விளக்கே யென்ன விரவிய மாயை மாய்த்தங்
 கூனுறு நுகர்ச்சி யெல்லா மேற்றரு ளுரிமை போற்றி.

(இ - ள்.) சிவஞானத்தினால் ஞேயத்தைக் கண்ணுற்ற எளியேனை விரைவாகத் தமது அறிவோடுங் கலங்கச்செய்து ஏகனாக்கித், தானல்லாத தொன்றைத் தானெனவும், தனதல்லாத வொன்றைத் தனதெனவும் கருதி நிற்கச்செய்த ஆணவமல காரிய முழுவதினையும் போக்கி, எப்பணியுந் தன்பணியே என்று இறைபணியினிற்கக் கதிரொளி முற்பட்ட நாண்மீன்களும், விளக்கும் அதனொளியா யடங்கியவாறுபோல் மாயாமலத்தினையும் போக்கி அவ்விடத்து உடலளவாய் நுகரக்கடவவினைகளையெல்லாம் தானே ஏன்றுகொண்டு அருள்செய்யும் உரிமைத் தன்மை வணங்கத் தக்கது.

(140)

 என்வழி யின்று காறு மிருந்தரு டன்னைப் போலத்
 தன்வழி யெற்றை ஞான்றுந் தங்குமந் நிலைமை தோன்றத்
 தன்னையு மெனையுந் தந்து தனதென தறமுப் பாழ்மேல்
 பின்னிய முழுப்பா ழான பெருகுபே ரின்பம் போற்றி.

(இ - ள்.) முத்தியினைப் பெறும் இக்காலமளவும் (அடியேன் சென்ற கருமத்துறை வழியே அடியேனைவிட்டு அடியேனோடும் கலந்திருந்தும் வெளிவராது நின்ற தன்றன்மையைப்போலத் தன் செயலின் வழியே எஞ்ஞான்றும் மீளாதடியேன் வியாப்பியமா யடங்கி நிற்கும் அந்நிலைமை விளங்கும்படி தன்னொடு கூடுதலாகிய சிவப்பேற்றையும் தன் ஞானத்தினாலே தன்னை யுணருமுறையின் வைத்துத் தமியேனை யுணரும் ஆன்ம லாபத்தையும் தந்து தனது அருட்செயலும் அடியேனது ஞாதுரு ஞானஞேயப் பகுப்புணர்வும் நீங்கும் வண்ணம் (அசுத்தம், மிச்சிரம், சுத்தம், என்னும் மூவகைப் பிரபஞ்சத்தினின்று நீங்குமிடத்து) ஆன்மவியாபகத்தைத் தலைப்பட்டு முனைத்தடங்கலும், அருளிற்றலைப்பட்டு ஐந்தொழில் செயக் கருதித்துவளலும், அவ்வருளில்