பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்383

அகத்தியன் அருள்பெறு படலம்

 மகத்தீ சனெனப் படவைப் பனவும்
 சகத்தீ சனெனப் படச்சார் வனவும்
 உகத்தீ சனெனப் படவுள் ளனவும்
 அகத்தீ சனடித் துணையன் றிலையே.

(இ - ள்.) பேரின்பத்துக் குரிய இறைவன் என்னும்படி உயர்வாகக் கொள்ளத் தக்கனவும், எல்லா உலகங்கட்கும் தலைவனாகக் கொண்டு யாவரும் சேர்தற்குரியனவும், ஊழிக்கால முடிவானும் அழியாதிருக்கும் இறைவனென்னுமாறு நிலைத்திருப்பனவும் ஆகிய நம் உள்ளத்தின்கண் தங்கியிருக்கின்ற இறைவனுடைய இரண்டு திருவடிகளன்றி வேறில்லை; (ஆகவே, அவைகளை வாழ்த்தி
வணங்குவோமாக.)

(வி - ம்.) மகம் - இன்பம்; அருள்வடிவான இறைவனிடத்திருந்தே, இன்ப முதலிய நலங்கள் தோன்றுவவாயின. இதனை, மணிமொழிப் பெருமான் இறைவனைப் பாடி மகிழுங்கால், "ஈறிலாப்பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே" என்றருளினர். எனவே, முழுமுதல் ஒருவனை மகத்தீசன்' என்றார். வைப்பனவும் சார்வனவும் உள்ளனவும் அடித்துணை அன்றியிலை எனக்கூட்டுக.

அகத்து ஈசன் - உள்ளத்தின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவன், "மலர்மிசை யேகினான்" என்னுந் திருக்குறட்பாவின் இத்தொடருக்கு, 'அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின், ஏகினானென இறந்த காலத்தாற் கூறினார்" எனப் பரிமேலழகியார் உரை விரித்ததும் இக்கருத்தாதல் அறிக. அகத்தீசன் அடித்துணை அன்றிலையே என்பதற்கு, இது, அகத்தியன் அருள்பெறு படலமாகலான் அகத்தியனாகிய ஈசனின் திருவடிகளன்றிப் பிறிதில்லையெனப் பொருள் கூறலுமாம். உம்மைகள் எண்ணுப்பொருளில் வந்தன. என்னை?

 1"எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை
  முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்
  றப்பால் எட்டே உம்மைச் சொல்லே"

என்ப தோத்தாகலான் என்க. ஏகாரம் : பிரிநிலை. "அன்றி இலையே" யென்பதில், வினையெச்சத் திறுதியில் நின்ற இகரவுயிர் செய்யுள் விகாரத்தால் தொக்குப் புணர்ந்தது.(1)

 திருக்கிளர் தாமரை செற்றிய பண்ணை
 மருக்கிளர் காசிவ ரைப்பிடை மேனாள்
 ஒருக்கிய வைம்பொறி யானுப தேசம்
 அருக்கிய சிந்தைய கத்திய னென்பான்.

(இ - ள்.) அழகால் விளங்குகின்ற தாமரைகள் அடர்ந்த வயல்கள் சூழ்ந்து விளங்குகின்ற காசி நகரினிடத்து முற்காலத்தில் அடக்கிய

 1. தொல். சொல: 7.