பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்385

பரனே' என, மணிமொழிப் பெருமானும் அம்மையாரைக் குறித்தல் காண்க. அருள்வடிவான ஆண்டவன் என்பதைச்சுட்டுதற்கு "அந்தணன்" என்றார். அந்தணன் - அழகிய தண்ணளியுடையோன். இறைவன் தமக்கென வொன்றாற்றாது, உயிர்களின் பொருட்டு ஆக்கல் அளித்தல் அழித்தல் தொழில்களையும், அவைகள் வாழ்தற்கு ஏற்ற பல்வகை அண்டத் தொகுதிகளையும் படைத்து, அவைகட்கு இன்பந்தரத்தக்க பல்வகை நிலையியற் பொருள்களையும் இயங்கியற் பொருள்களையும் படைத்தருளியோன் ஆகலான் "அந்தணன்" என்னும் பெயராற் குறித்தார். ஆளுடைய நம்பியும் "அந்தணாளனுள் அடைக்கலம் புகுத அவனை" என்றருளியதாம் அறிக. மெல் அணை - மென்மையான இருக்கை, ஈண்டு அரியணை. அதுகாலை அகத்தியர்வந்து வணங்கி இது சொற்றான் - மேல் வருவதாகிய இதனைச் சொல்லலானார் என்றபடி.வணங்க என்னும் செயவெனெச்சம் காரணப்பொருட்டாக நிகழ்காலங் காட்டிற்று. அமர்வேலை : வினைத்தொகை. ஈண்டு இறந்தகாலம். வந்து தாழ்ந்து மகிழ்ந்து என்னும் இறந்தகால வினையெச்ச அடுக்குகள், சொற்றான் என்னும் வினைப்பெயர்கொண்டு முடிந்தன.

(3)

 சுந்தர மங்கையர் சொல்விழை காம
 மைந்தரின் யாரும கிழ்ச்சிதி ளைக்கும்
 செந்தமி ழென்னுந்தி ருத்தகு பாடை
 தந்தருண் ஞானமுந் தந்தரு ளென்றான்.

(இ - ள்.) அழகுள்ள இளமங்கையரின் சொற்களை விரும்புகின்ற காமத்தையுடைய ஆடவர்களைப்போல, எல்லோரும் மகிழ்ச்சிகொள்ளுகின்ற செந்தமிழ்மொழி யென்னும் சிறப்புப் பொருந்திய மொழியினைக் கொடுத்தருளி, அருளுக்குக் காரணமான மெய்யறிவையும் தந்தருள்வாயாக என்று கேட்டுக்கொண்டார்.

(வி - ம்.) செந்தமிழ் மொழியானது கற்கக் கற்கக் கற்போரைத் தன்வயப்படுத்தி இன்புறுத்துந் தன்மையது. இச்சிறப்பால் தமிழ்விடுதூது என்னும் நூலில் அவ்வாசிரியர் "இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர், விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்" என்று கூறுகின்றார், அதன் இனிமையாலென்க. இத்தமிழ்மொழியைப் பயின்றார்க்கு அஃது இன்பமூட்டலை, அழகு மிக்க மங்கையர்பால் இன்ப அன்பால் அவர்தம் சொல்லை விழைந்து செல்லும்' காமமிக்க ஆடவர், அவரைவிடாது தொடரும் தன்மைபோலப் பயின்றாரைத் தன்வழி பற்றச் செய்தலால் "காமமைந்தரின் யாரும் மகிழ்ச்சி திளைக்கும் செந்தமிழ்" என்றார். பாடை - மொழி, பாடுதல் - படித்த தொன்றாம் பொருளுடையது. அஃதாவது நூல்வழக்கால் படித்தற்கும் சொல்வழக்கால் பேசுதற்கும் உரியது. பாஷை என்னும் வடசொல் திரிபன்று. திருத்தகு - அருட்செல்வத்திற் சிறந்த என்னும் பொருளது. மைந்தரின் திளைக்கும் பாடை தந்து அருள் ஞானமும் தந்தருள் எனக்கூட்டிப் பொருள் கொள்க. உம்மை இறந்தது தழீஇய எச்சம்.

(4)

 மொழிந்தெதிர் நின்றமு னிவனை நோக்கிச்
 செழுந்தமி ழுஞ்சிவ ஞானமும் வேட்பின்