என வரூஉம் சோணசைலமாலைச் செய்யுளான் அறிக. அதனால் "ஓருடல் அட்டொளிபெற்ற திக்காசி" என்றார். ஒளி - புகழ். "ஒளிநிறான்" என்புழி இப்பொருள் தருதலை அறிக. ஈருடல் - நுண்ணுடம்பு பருவுடம்புகளாகிய இருவுடம்புகள். இவ்வுடம்புகளுள் நுண்ணுடம்பு உட்கருவிகள்; அவை, மனம் புத்தி சித்தம் அகங்காரங்களை இடனாகக் கொண்டு நிற்கும். பருவுடம்பு தோல் எலும்பு முதலிய எழுவகை மூலப்பொருள்களைக்கொண்டு கட்டப்பட்டு இயங்குவது. இவ்விரண்டுங்கூடிய வழியன்றிக் கன்மங்கள் இயற்றப்படாமையின் "ஈருடல் ஈட்டு இருள்மாயை கன்மங்கள்" என்றார். இத்திருத்தணியைச் சார்ந்து முருகன்பால் அன்பு பூண்டு தவமுஞற்றுவார்க்கு அப்பாவங்கள் ஒருங்கே தொலைதல் ஒருதலையென்பார், "வேரொடு மாய்த்தலிற் காசியின் மேலாம்" என்றார். (8) | பெற்றுப தேசம் பிறங்கிய வஞ்ஞான் | | றிற்றது சூர்முத லென்றெழுந் தாடல் | | உற்றிடு நம்மொரு சூழலங் குண்டால் | | கற்றவர் காசியெ னக்கரை வாரால். |
(இ - ள்.) நாம் அம் முருகன்பால் உபதேசம் பெற்று விளங்கிய அந்நாளில் இனிச் சூரபன்மாவாகிய தலைவன் முடிந்தான் என்னும் மகிழ்ச்சியால் கிளர்ந்தாடுதல் கொண்டதால் சார்ந்த நம்முடைய அவை யிடமும் அங்கே உளது; கற்றுணர்ந்தோர் அத்திருத்தணியைக் காசி யென்றே கூறுவர். (வி - ம்.) உபதேசம் பெற்றது, சிவபெருமான் நான்முகனைச் சிறைவீடு செய்யுமாறு கூறியபோது எனக்கொள்க. முன்னரே இதனை 7-ஆம். பாடலில் விளக்கியுள்ளேம். சூர்முதல் - சூரபன்மாவாகிய தலைவன்; சிவபிரான் முருகன்பால் பிரணவப் பொருளைக் கேட்டுத் தெளிந்தபோது, மிக்க மகிழ்ச்சி பொங்க இனி, இம்முருகனால் சூரபன்மா இறந்தானெனத் திருக்கூத்தாடினார். எனவே, அதைக் குறிக்கும் ஓர் இடமும் அங்கே உள்ளது என்பார், "நம்மொரு சூழலங்குண்டு" என்றார். இற்றது - அழியும். அஃறிணை வாய்பாடாகக் கூறிய சூர்முதல் என்பதற்கேற்ற பயனிலையாக ஒன்றன்பால் விகுதிபெற இற்றது என்றார். இற்றதென்பது தெளிவுபற்றி எதிர்காலம் சிறந்த காலமாகக் கூறப்பட்டது. என்னை? | 1 "வாராக் காலத்தும் வரூஉங் காலத்தும் | | ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி | | இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் | | விரைந்த பொருள என்மனார் புலவர் " |
என்ப தோத்தாகலான் என்க.சூர்முதல் - சூரபன்மாவாகிய தலைவன் 2 "சூர்முதல் தடிந்த சுடரிலை வடிவேல்" என்னும் திருமுருகாற்றுப்படை இவ்வடிக்கு இவ்வாறு நச்சினார்க்கினியர் பொருளுரைத்தமை அறிந்தின்புறுக. (9) 1. | தொல். சொல் : 44, | 2. | திருமுருகாற்றுப்படை; 99. |
|