| இத்தகு காசியி றும்பொழு தெம்மான் | | மெய்த்தொளிர் தாரகம் விள்ளுவ தாகும் | | அத்தகு காசிய னைத்தினு மேலாம் | | உத்தம வுண்மையு ரைப்பதெஞ் ஞான்றும். |
(இ - ள்.) இத்தகைய காசிப் பதியானது மக்கள் உயிர்மாயும்போது எம்மால் உண்மையுடையதாய் விளங்கும் தாரக மந்திரம் உபதேசிக்கப்படும் பெருமை யுடையதாம். அத்தகைய திருத்தணியாகிய காசி எல்லாவற்றினும் மேலானதாம். ஏனெனில் முதன்மையான மெய்ப் பொருளாகிய மந்திரங்களை எப்போதும் உபதேசிக்கப்படும் பெருமையுடையது ஆதலின். (வி - ம்.) இறும்பொழுது - இறக்குங்காலம். தாரகம் - பிரணவ மந்திரம். விள்ளுவது - ஓதுவது, இறக்கும்பொழுது காசியில் ஒவ்வொருவருக்கும் சிவபெருமாற்கு உரித்தாகிய பிரணவ மந்திரத்தை ஓதுவர். இங்கே இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. உத்தம உண்மை -சிறந்த உண்மைப்பொருள். அஃதாவது வீடுபேறு நல்கும் உண்மையறிவு. மெய்த்து - மெய்ம்மையையுடையது; ஒன்றன்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர். (10) | ஈண்டிறும் போதிலி யம்புப தேசத் | | தீண்டுப யன்னம தின்னுரு வாகும் | | ஆண்டரு ளுண்மையி னைம்மல மாங்கே | | மாண்டொளிர் முத்திவ ரும்பய னாமே. |
(இ - ள்.) இக்காசித்தலத்தில் இறக்குங்காலை ஓதுகின்ற பிரணவத்தாற் பொருந்திய பயனாவது நமது இனிய வடிவம் காண்டலேயாகும்; அவ்விடத்தே அருளான திருத்தலினால் ஐவகைப்பட்ட மலங்களும் கெட விளங்குகின்ற வீடுபேறானது கிட்டுகின்ற பயனாகும். (வி - ம்.) ஈண்டு - இவ்விடம்; அண்மைச்சுட்டு முதனீண்டது. இறுதல் - முடிதல், இறத்தல். உரு - வடிவம். அது, அதனைக் காணுதல் பொருள் தந்து நின்றது. பிரணவப் பொருளாக விளங்குவோன் இறைவனாகும். அதை ஓதுவோர்க்கு இறைவன் நினைந்த வடிவோடு விரைந்து வந்து காட்சி தந்தருள்வது மறைநான் முடிபாகலான் இறைவன் "நமது இன்னுருவாகும்" என்றருளினார். ஐம்மலம் - ஐவகைப்பட்ட மலங்கள், அவை : ஆணவம், கன்மம், மாயை, மாயாகாரியம் திரோதாயி என்பன. இவைகளின் குணவியல்புகளைச் சித்தாந்த முதலிய தத்துவ நூல்களிற் காண்க. அத்தலத்தில் இறைவன் திருமந்திரத்தை ஓதுவார்க்கு மலங்களற்று வீடுபேறு கிட்டும் என அதன் பெருமை கூறியவாறறிக. (11) | ஞானமெ வற்றினு மேலது நல்கும் | | தானமு மேலெத்த லத்தினு ஞானம் |
|