பக்கம் எண் :

390தணிகைப் புராணம்

 ஆனத லத்தினு மத்தல மேலாம்
 வானருள் யாமும தற்கிவர் மாண்பால்.

(இ - ள்.) ஞானங்கள் யாவற்றினும் மேலானதாகிய சிவஞானத்தைத் தருகின்ற திருத்தலமும் அது. மேன்மையான எல்லாத் தலத்தினும் பிற ஞானத்தைத் தருவதாகிய தலங்களினும் அத்தலமானது தேவருட் சிறந்த யாமும் அதன்கண் தங்கியிருக்கின்ற பெருமையால் மேலாம்.

(வி - ம்.) ஞானமென்பது தொகையால் ஒன்றாகும். வகையால் பரம் அபரம் என இரண்டாம். இவ்விரண்டும் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்பனவாக விரியும். இவை ஞான சாதனங்கள் எனப்படும். இவற்றுள் கேட்டல், சிந்தித்தல் இரண்டும் அபரஞானத்திலும், தெளிதல், நிட்டைகூடல் இரண்டும் பரஞானத்திலும் சேர்த்தோதுவர். இதனைச் சிவஞான சித்தியார் எட்டாவது நூற்பா விளக்கப் பகுதிக்கண், அருணந்தி சிவாச்சாரியார்,

 1 "கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை
           கிளத்தலென ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம் "

என, விளக்குதலான் அறியப்பெறும். இவ்விருவகை ஞானங்களுள் பரஞானமாகிய மெய்ஞ்ஞானத்தைத் தந்து பந்தபாசங் களைந்து பதியொடு கூட்டி வீடுபேறு நல்கும் சிறப்புடையது இத்தலம் என்பது தோன்ற "ஞானம் எவற்றினும் . . . . . தானம்" என்றார். இத்திருஞானத்தைத் திருஞானசம்பந்தர் வரலாறுரைக்கப் போந்த சேக்கிழார் பெருமான், "சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவமதனை அறமாற்றும், பாங்கினிலோங்கிய ஞானம், உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம், தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்" என்றருளுமாற்றா லறிந்தின்புறுக. வானர் - வானவராகிய தேவர்கள். அவருள், தாம் தேவர் தேவனாக விளங்குதலான சிவபெருமான் தாம் ஆங்கு எழுந்தருளியிருக்கும் சிறப்புக்கொண்டது அத்தலம் என்பதைக் குறித்துணர்த்த "யாமும்" என உணர்வு சிறப்பும்மை கொடுத்துரைத்தார். இவர்தல் - தங்குதல்; விரும்புதல் என்னும் பொருளது. மாண்பு - சிறப்புடையது: பண்பாகு பெயர்.

(12)

 ஆங்குப தேசம றுமுக னல்கத்
 தாங்கிய ஞான்றுத டமொன்ற கழ்ந்து
 வீங்கிய வேணிவி ழுப்புன றாழ்த்தாம்
 தேங்கிய வச்சிவ கங்கையு முண்டால்.

(இ - ள்.) அத்திருத்தலத்தினிடத்தே எமக்கு ஆறுமுகங்களையுடைய முருகன் பிரணவப் பொருளை உணர்த்த நாம் அதனை ஏற்றுக்கொண்ட அந்தநாளில் தடாகமொன்றை வெட்டி அதன்கண் உயர்ந்த எம் சடைக்கண்ணுள்ள தூய கங்கைநீரை வீழ்த்தி விழச்செய்தோம்; அவ்வாறு வீழ்ந்து பெருகிய அந்தச் சிவகங்கைத் தீர்த்தமும் உடையதாகும்.

(வி - ம்.) ஆங்கு - சுட்டு நீண்டது. உபதேசம் - பிரணவப் பொருளை இறைவற்கு அருளிச்செய்தமை. ஞான்று - நாள். வீங்குதல் - மிகுதல்,

 1.  சிவஞானசித்தியார் : 8 : 24.