பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்391

அஃது ஈண்டு உயர்வு குறித்தது. வீங்கிய : இறந்தகாலப்பெயரெச்சம். இறைவன் திருச்சடையாகிய வேணிக்கு அடையாக வந்தது. "வீங்கு நீரருவி வேங்கடம்" என்புழிப்போல. விழு - சிறப்பு; விழுமம் என்பதில் உள்ள ஈறு குறைந்து வந்தது. தாழ்த்தல் - சாய்த்தல்; கீழே பெருகவிடுத்தல். தாழ்த்தாம் :தன்மைப்பன்மை இறந்தகால வினைமுற்று. தேங்குதல் - நிறைதல். தேங்கிய நிறைந்த; பெருகிய. சிவ கங்கை - சிவகங்கையென்னும் பெயரையுடைய தீர்த்தத் தடாகம். ஆல் : அசைநிலை.

(13)

 இவணுறு கங்கையெ ரிசடை யுய்ப்பத்
 தவழ்வதொன் றேனுந்த வமுனி வாயின்
 உவளக முற்றுலந் தாரென்பி னார்ந்த
 தவணுறு கங்கைக்க ழுக்கொன்று மின்றே.

(இ - ள்.) இவ்விடத்துள்ள கங்கையாறானது, எனது நெருப்புப் போன்ற சடை முடியில் யான் நிறுத்தத் தவழும் பெருமை யுடையது ஒன்றெனினும், முன்னர்த் தவம் புரிந்த சன்னு என்னும் முனிவர் வாயிற் புகுந்தது; அன்றியும் மறைவிடத்துப் (பாதலத்து) பொருந்தி மடிந்து கிடந்தவர் (சகரர் அறுபதினாயிரவர்) எலும்பினும் படிந்தது ஆதலால் அழுக்குடையது ஆம். ஆத்தணிகைப் பதிக்கண்ணுள்ள சிவகங்கைத் தீர்த்தத்திற்கு அத்தகைய அழுக்கொன்றும் இல்லை.

(வி - ம்.) சிவபெருமான் தன் சடைமேலிருக்குங் கங்கையினும் தூய்மையுடையது தணிகைப்பதிக் கண்ணுள்ள சிவகங்கை யென்று அதன் பெருமை கூறினர். பகீரதன் முன்னர் தம் முன்னோராகிய அறுபதினாயிரம் சகரரும் கபில முனிவர் சாபத்தால் வெந்திறந்த செய்தி அறிந்து அவர் நற்கதி யடையும் பொருட்டுக் கங்கையைப் பூவுலகத்திற்குக் கொண்டுவர முயன்றான் என்பதும், கங்கையின் வேகத்தைச் சிவபெருமான் சடையிற்றாங்கித் தணித்து விடுத்தனர் என்பதும், கங்கைபாதலம் நோக்கிச் செல்லும்போது சன்னு முனிவர் தவத்தைக் கலைத்ததென்று வெகுண்டு வாயைத் திறந்து பருகினர் என்பதும், பகீரதன் அறிந்து வேண்ட அவனுக்கிரங்கிச் செவி வழியாக விடுத்தனர் என்பதும், பின்பு சென்று சகரர் அறுபதினாயிரவர் வெந்து கிடந்த என்புச் சாம்பலிற் படிந்தது என்பதும், சகரர் நற்கதி பெற்றனர் என்பதும் வரலாறாகும். இதனை யுட்கொண்டு தவமுனிவாயின், உலந்தார் என்பின் ஆர்ந்தது என்றார். ஆர்ந்தது - பொருந்தியது. இவணுறு கங்கை அழுக்குடையது என ஒரு சொல் வருவித்து முடிக்க; அவணுறு கங்கைக்கு அழுக்கொன்றும் இன்றே என்ற குறிப்பினால். உவளகம் - அந்தப் புரம். இது ஈண்டு அதுபோன்ற மறைவிடம் ஆகிய பாதலத்தையுணர்த்தியது. சகரர் தந்தை, அசுவமேதம் புரிய விடுத்த பரியை இந்திரன் ஒருவரும் அறியாமல் பிடித்துக்கொண்டு போய்க் கபில முனிவர் குடிலின்பின் பாதலத்திற் கட்டிவைத்துச் சென்றான். அதனை யறியாது சகரர் அம் முனிவர் தாம் கட்டினர் என்ற சினந்து வைது போர் புரியத்தொடங்கியதால் கபில முனிவர் சினந்து சாபத்தீயால் அவர்களை எரித்தனர் என்பதும் அறிக.

(14)

 பகீரதன் மாதவ னாலிது பாரில்
 உகாவவர் பேரொடு மோங்கிய தாங்கண