பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்393

 அலக்கணு றுத்திய வாணவத் தாமஃ
 துலக்குவ தேலுல வாப்படர் யாதே.

(இ - ள்.) துன்பத்தில் ஆழ்த்திய, கொடிய நோய் முதலாகவுள்ள கலக்கத்தைச் செய்கின்ற குற்றமுடையன யாவும் துன்பத்தைத் தருகின்ற ஆணவமல மயக்கத்தால் உண்டாவதாகும்; அந்த ஆணவமலமும் கெட்டொழிவதாயின், கெடாத துன்பம் எது? ஒன்றுமில்லை.

(வி - ம்.) மலக்கம் - துன்பம். பிணி - நோய். எவரையும் எதையும் செய்ய இயலாவாறு கூட்டுவது என்பதுபொருள். அதன்கொடுமை தோன்ற வண்மையென்னும் அடைமொழி கொடுத்தோதினார். ஆதியென்றமையால் வஞ்சம் பொறாமை கொலை களவு முதலிய பிறவும் கொள்க. கரிசு - குற்றம். அலக்கண் - துன்பம். இன்பம் வரினும் துன்பம் வரினும் முதற்கண் வெளிக்குக் கொணர்ந்து காட்டுவனகண் களேயாதலின், கண்ணின் மேலேற்றி அலக்கண் என வழங்குவது நம் செந்தமிழ் ஆசிரியன்மார் மரபு. ஆகலான், அவ்வழிக்கண் தோன்றிய ஆசிரியரும் "அலக்கண்" என்றோதினார். அலக்கண் - அல்லாதகண்; அஃதாவது நன்றல்லாத கண்; எனவே துன்பத்தைத் தரும் கண்ணென்பது பெற்றாம். கண்ணைக் கலங்கவைக்கும் தன்மையினால் துன்பத்துக்குப் பெயராக வந்தது. இன்னும் புன்கண், இடுக்கண் முதலிய வழக்குகளானும் அறிக. இவைகளெல்லாம் மூலமலமாகிய ஆணவமலத்தால் தோன்றி மக்களைத் துன்புறுத்துவதாகலான், "ஆணவத்தாம்" என்றார். அதன் கொடியதன்மை தோன்ற, துன்புறுத்துமென்ன எதிர்காலத்தால் கூறாது, இறந்த காலத்தால் விடாது துன்பு செய்யும் என்னுந் தெளிவு பற்றிக் கூறினார். அத்தகைய ஆணவமலமும் இத்தீர்த்தத்தில் முழ்கினாரைவிட்டு விலகி யோடுமென்பார் "உலக்குவதேல்" என வியப்புச்சுவை தோன்ற உரைத்தார். இக்கொடிய ஆணவமும் விலகப் பெருந்தன்மையை விலகச்செய்யுமென்றால் பிற எவற்றானும் துன்பமுற்று வருந்த வேண்டுவ தில்லை யென்பார் "உலவாப்படர் யாதே?" என வினாக் கொடுத்துரைத்தார். யாது : சாதியொருமைபற்றி வந்த ஒன்றன்பாற்படர்க்கை வினாப்பெயர்.

(17)

 முத்தியின் மேற்பய னின்றது மூழ்கின்
 அத்தலை நல்குவ தத்தட மென்றான்
 மெத்திய வேனைவி ழுப்பொருள் யாதே
 பத்தியி னாடுநர் பாற்பலி யாதே.

(இ - ள்.) வீடுபேற்றைக் காட்டினும் மக்கள் அடையவேண்டும் மேலான பயன்வேறில்லை; மூழ்கினால் அம்முத்திப் பேற்றினை நல்குவது அச் சிவகங்கையெனின், அதினும் மேலான மற்ற சிறந்த பொருள்யாதுளது? அன்போடு இக்கங்கையில் மூழ்குவோரிடம் தீயூழ் எதுவும் சாராது.

(வி - ம்.) வீடுபேற்றுக்கு மேலான எய்தவேண்டும் பொருள் எதுவுமில்லை. அதுவும் இக்கங்கையில் மூழ்குவோர்க்கு எளிமையிற் கைவரப்பெறும் என்பார் "அத்தலை நல்குவது" என்றார். தலை - இடமென்னும் பொருளது. அது : ஆகுபெயராகக் கங்கையைக் குறித்தது. மெத்துதல் - மிகுதல்; சிறத்தல் என்னும் பொருளது. விழுப்பொருள் -