பக்கம் எண் :

394தணிகைப் புராணம்

சிறந்த பொருள். யாது - எது : இல்லையென்னும் எதிர்மறைப் பொருள் தந்தது. இவ்வினாவினைப் படர்க்கை ஒருமைச்சொல். பால் - ஊழ்; முறை, நியதி, தெய்வம் என்பன ஒரு பொருள் குறித்த சொற்கள். இத்தடாகத்தில் அன்போடு மூழ்குவார்க்கு தீமைசெய்யும் ஊழ்வினையும்தன் பயனை ஊட்டாது நீங்குமென்பார் "ஆடுநர்பாற் பலியாதே" என்றார். பலித்தல் - நடத்தல்; செய்தல். பால் என்பதின் லகரம் அல்வழியினும் இசையின்பம் நோக்கி வலிந்தது.

(18)

 விலங்குப றப்பைவி ரைத்தரு வாக
 அலங்கிய வத்தட நீருட லண்மின்
 இலங்கிய தெய்வத மாயிடர் வீழ்த்துப்
 புலங்கெழு போகம்பொ ருந்தவி டுக்கும்.

(இ - ள்.) விலங்காக பறவையாக மணம் பொருந்திய மலர்தரும் மரங்களாக எதுவாயினும் அசைகின்ற அத்தடாகத்தின் நீரானது அவ்வவைகளின் உடலிற்படுமானால், அவை விளங்குகின்ற தெய்வத் தன்மையுடையவாய்த் தம் துன்பத்தை நீக்கி அறிவு பொருந்திய இன்பத்தின்கண் சேரும்படி செய்யும்.

(வி - ம்.) பறப்பை - பறவை. பறத்தலையுடையதைப் பறப்பையென்றார். பறப்பு என்னும் சொல்லின்மேல் ஐ விகுதி விகுதிமேல் விகுதியாக வந்தது. பறவை என்பதே வழக்காயினும் தமிழிற் புதுச்சொற்கள் தோன்றி மிளிர்ந்து வளரப் படைத்துக் காட்டி மொழிவளத்தைப் பெருக்க வழி கோலிக் காட்டுகின்றார் ஆசிரியர். விரை - மணம்; அதனையுடைய மலருக்கு ஆகுபெயர். அலங்குதல் - அசைதல். இக்காரணத்தால் மாலைக்கு அலங்கல் எனப்பெயரிட்டு வழங்கினர். நீர் உடல் - நீரின்கண் உடலானது என்று விரியும் : ஏழன்தொகை. அன்றி எழுவாயாக நீரினைக் கொளலுமாம். தெய்வதம் - தெய்வம். புலம் - அறிவு. கெழு - பொருந்திய. அன்றி இடமிக்க என்றலுமாம். விடுக்கும் - விடும்.

(19)

 திரைத்தவிர் பன்மணி சிந்தியி ரைத்து
 நுரைத்தலை யத்தட நுண்புன றோய்ந்த
 விரைத்தம ருத்துவி ராவிய புல்லும்
 நிரைத்தது றக்கநி லத்தர செய்தும்.

(இ - ள்.) அலைகளால் சுருட்டி விளங்குகின்ற பலவகை மணிகளைச் சிதறி இரைச்சலிட்டு நுரைகளையுடைய நீர்ப்பரப்பினதாய அக்கங்கையின் தெளிந்த நீரில் படிந்த விரைந்து செல்லுதலையுடைய காற்றினால் அசைக்கப்பெற்ற புல்களும் வரிசையாகக் கூறப்படுகின்ற வானுலகத்தின் கண்ணுள்ள இந்திரபதவியைப் பெற்று விளங்கும்.

(வி - ம்.) திரைத்தல் - சுருட்டல். திரைத்து - சுருட்டி; வினையெச்சம். பல்மணி - ஒன்பதுவகை மணிகள். சிந்தி - சிதறி. அலைகளால் மோதி அடித்து என்றபடி. நுரைத்தலை - நுரைகளைக்கொண்ட நீரின் மேலிடம். தலை : இடப்பொருள்தரும் ஏழன் உருபு. நீர்க்கு நுண்மையாவது கலங்கலின்றித் தெளிவுடைமையாக இருத்தல்.