| விரைத்த - விரைவினையுடைய; ஒன்றன்பாற் படர்க்கைப் பெயரெச்சம். மருத்து - காற்று. இத்தீர்த்தத்திற் படிந்த காற்றுப் புல்லின்மேல் வீசப் பெறுமாயின், அப்புல்லும் தன் ஓரறிவுயிர்ப் பண்புமாறி பேரறிவு பெற்று அதனால் தேவருலகம் புக்கு அவ்வுலக இன்பங்கள் யாவற்றையும் பெற்றின்பநுகர்ந்து இறுதியில் வீடுபேறுற்று இன்புறும் என்றமையால் அத்தீர்த்தத்தின் சிறப்பை மிகுத்துக் கூறியவாறாம். நிரைத்த - வரிசையாகக் கூறப்படுகின்ற என்னும் பொருளது, துறக்கநிலம் - ஈண்டு எல்லா உலகங்களினும் சிறந்த வீட்டுநிலம். "நிலமிசை நீடுவாழ்வார்" என்றும் வள்ளுவர் கூறும் உலகமும் இஃதே எனக்கொள்க. உம்மை : உயர்வு சிறப்பு. (20) | | அவ்வயின் வாழ்தரு வாதியு மாங்கண் | | | செவ்விய நந்திரு மேனியி னார்த்த | | | எவ்வமி லாமல ராதிக ளீவ | | | எவ்வெவை யுஞ்சிவ லோகம தேறும். |
(இ - ள்.) அத்தடாகக் கரையோரத்தே இருக்கின்ற மரங்கள் முதலியனவும், அவ்விடத்தே சிறந்த நம் திருமேனியின்மீது நிறைக்கப்படுகின்ற குற்றமற்ற மலர்கள் முதலியவற்றைத் தருவனவாகிய எப்பொருள்களும் நம் சிவவுலகத்தை அடையும். (வி - ம்.) தரு ஆதியும் என்பது, மரம் செடி கொடி முதலியவற்றை. இறைவற்கு அணியப்படுவனவாகிய மலர்களையும் இலை முதலியவற்றையும் தருகின்ற பாதிரி கொன்றை ஆத்தி முதிலிய மரங்களும், முல்லை இருவாட்சி பிச்சி பச்சை மாசிப் பச்சை மருக்கொழுந்து மரு முதலிய செடி கொடிகளும் பிறவுமாய நிலையியற் பொருள்களும் பிறவுமாம். எப்பொருள்களும் எமக்குச் சூட்டற்குரிய இலை, பூ முதலியவற்றைத் தருதலான், அப் பெரும்பயனால் அவை, அறிவால் அஃறிணையாயினும் அறிவிற் சிறந்தார் செய்யும் அரிய தொண்டாகிய மலர் முதலியவற்றைத் தந்த பயனால் வீட்டுநெறி யடைந்து இன்புறும் என இறைவன், அத்தடாகத்தின் பெருஞ்சிறப்பை விளக்கிக் கூறினார். வயின் - இடம். விட்டுவிடாத இலக்கணைப் பொருட்டாகத் தடாகக்கரையை உணர்த்திற்று. கங்கைக்கண் வீடு என்பதுபோல. தரு - மரம். மேனி - இறைவன் திருவுருவ அடையாளக்குறி. இறைவற்கு அணியப்பெறும் தன்மையால் எவ்வமில்லாமை வேண்டப்பட்டது. "குடங்கை நீரும் பச்சிலையும் இடுவார்க்கு இமையாக் குஞ்சரமும், படங்கொள் பாயும் பூவணையும்" தரும் பரமனாதலால் தமக்கு வழிபாடாற்றப் பூவும் இலையும் கொடுத்துதவும் தன்மையால் அவைகளும் வீட்டின்பம் எய்துவதாயிற்றென்க. (21) | | பாங்கரி னந்திப டிந்தருள் கூடும் | | | வீங்கிய யாறும்வி ழுத்தக வெய்தும் | | | ஓங்கிய வச்சிவ கங்கையொ டொக்கும் | | | தேங்குகு மாரதி ருத்தமு முண்டால். |
(இ - ள்.) அதன் பக்கத்தில் நந்தியானவன் மூழ்கி அருள்பெற்ற சிறந்த ஆறும் மிக்க சிறப்புடையதாய் அந்தச் சிவகங்கையை யொத்திருக்கின்ற |