| நீர்நிறைந்த குமாரதீர்த்தம் என்னும் தடாகமும் உள்ளனவாம். (வி - ம்.) பாங்கர் - பக்கம்; அஃதாவது சிவகங்கையை அடுத்தபக்கம். நந்தி - நந்தீசுரர். அருள்கூடும் - அருள்பெற்ற; இயல்பாக வந்த காலவழுவமைதி, வீங்குதல் - பெருகுதல்; சிறத்தல். விழுத்தகவு - மிகச்சிறப்பு. தேங்கு - நீர்நிறைந்த. திருத்தம் - தீர்த்தம் : தீர்த்தம், தீர்த்தல் என்னும் பொருள்தரும் தொழிற்பெயர். அது துன்பத்தைத் தீர்த்தல்; களைப்பைத் தீர்த்தல்; அழுக்கைத் தீர்த்த (போக்க)ல்; தாகத்தைத் தீர்த்தல் என்னும் பொருளவாய்த் தீர்த்தம் என வழங்கிற்று. இது, வடமொழியிற் சென்று வழங்கியமையால், வடசொல்லென மயங்கினர். அதைத் தமிழ்ச்சொல்லாக்கவே தீர்த்தம் திருத்தமென்றனரென்க. குமாரதிருத்தம், குமாரக் கடவுளராகிய முருகப்பெருமான் பெயரால் வழங்கப்படும் தீர்த்தம் என்க. (22) | | முழங்குறு விண்ணதி மூன்றவை யெம்மால் | | | வழங்கிடப் பட்டன மாலயன் மன்னற் | | | கழுங்கிய வேதற்க ருளிய கங்கை | | | பழங்கண றுக்கும்ப கீரதி யீது. |
(இ - ள்.) ஒலிக்கின்ற வானயாறுகள் கங்கை யமுனை சரசுவதி என்னும் பெயருடைய மூன்று; அவைகள் திருமாலும் நான்முகனும் மூழ்கி ஆடுதற்காக எம்மால் தரப்பட்டவையாகும்; துன்பத்தால் வருந்திய நான்முகனுக்காக அருளிய கங்கையானது துன்பத்தை ஒழிக்கின்ற பகீரதி என்பதே இக்குமார தீர்த்தம் ஆகும். (வி - ம்.) விண்நதி - வானயாறு. வானத்தின்கண் உள்ள தூயயாறு மூன்று. அவை தமிழ்ப் பெயர்களாகக் கங்கை, தொழுனை, வாணி என்னும் பெயரால் குறிக்கப்பெறுவனவாம். சிவபெருமான், திருமாலும், நான்முகனும் மூழ்குதற்காக அருளப்பட்டவை இம்மூன்று மென்றும், துன்பத்தால் அலைக்கப்பட்ட பிரமனுக்காக அருளப்பெற்றதே இக்குமார தீர்த்தமென அகத்தியர்க்கு இத்தீர்த்தத்தின் பெருமையை இறைவன் உணர்த்தியருளினார். பிரமன் துன்பத்தையும் மாற்றும் சிறப்புடைமையால் ஏனைய மக்கள் துன்பத்தை அறுப்பது கூறவேண்டாதாயிற்று. எனவே, "கங்கை பழங்கண் அறுக்கும் பகீரதி ஈது" என்றார். (23) | | மற்றையி ரண்டுமவ் வானின கத்தே | | | உற்றன நங்கயி லாயமு றுத்த | | | அற்றமில் கங்கையொன் றள்ளிலை வெள்வேற் | | | கொற்றவன் முன்னக்கு றுகிய தாங்கு. |
(இ - ள்.) யாறுகள் மூன்றனுள் யமுனை சரசுவதி என்னும் ஏனைய இரண்டும் அவ்வானத்தினிடத்தே தங்கலாயின, தூயதான கங்கை யொன்றும் நம் கைலாய மலையிடத்தே விடுக்கப்பட்டது; அது, கூர்மை பொருந்திய இலைவடிவமைந்த ஒளிபொருந்திய வேற்படையையுடைய வெற்றியுடைய முருகனானவர் அங்கே வருமாறு கருதச்சென்றதாகும். |