பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்397

(வி - ம்.) மற்றை என்பது வினைமாற்றாகச் சுட்டியதற்கு இனமாய யமுனை சரசுவதி ஆகிய இரண்டையும் சுட்டிற்று. உறுத்தல் - செலுத்துவித்தல், உறுத்தது எனற்பாலது கடை (விகுதி) குறைந்து நின்றது. தம்மால் ஏவப்பட்டுப் போக்குவித்தலின் "உறுத்த" என்றார். அற்றம் - கெடுதல்; குற்றம், அழியாமை என்றலுமாம். அள் - கூர்மை. இலை - இலைபோன்ற வடிவு. இவை வேலுக்கு அடை. மொழிகள். கொற்றவன் - வெற்றியுடையோன் என்னும் பொருளது. முன்ன - நினைக்க. முருகப்பெருமான் நினைத்தலால் கங்கை அங்கே குமார தீர்த்தமாக அமைந்தது என்க.

(24)

 ஆதலி னாற்கும ரன்பெய ரான்ற
 தீதறு நங்கயி லாயதி ருத்தம்
 ஓதிய வச்சிவ கங்கையொன் றொக்கும்
 ஈதல தொன்றும தற்கெதி ரின்றே.

(இ - ள்.) ஆதலால் குமரன் பெயரால் மாண்புற்ற குற்றமற்ற நமது கைலாயமலைத் தீர்த்தமே சொல்லப்பட்ட அந்தச் சிவகங்கை ஒன்றினை ஒத்திருப்பது வேறுஎந்தத் தீர்த்தமும் இதற்கு ஒப்பாக இல்லாததாகும்.

(வி - ம்.) ஆன்ற - மாண்புற்ற; சிறந்த. "ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்" என்பது காண்க. குமரன் பெயர் ஆன்ற திருத்தம். குமாரதீர்த்தம், இடைப்பிறவரலாக வந்தது. முன் கூறப்பட்ட சிவகங்கை என்னும் தீர்த்தத்துக்கு ஒப்பானது இஃதொன்றே வேறொன்றுமில்லை யென்பார். "கங்கை யொன்றொக்கும் . . . . இன்றே" என்றார். எதிர் - நேர் என்னும்பொருட்டு. இன்று - இல்லை; ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்று. ஏகாரம் : ஈற்றசை.

(25)

வேறு

 குட்டநோய் பெரும்பிணி குருதி கால்பிணி
 முட்டிய முயலகன் முருக்கும் வாதநோய்
 தொட்டுயிர் விழுங்குறுஞ் சூலை யாதியும்
 அட்டெழி ற்ருவதக் குமார தீர்த்தமே.

(இ - ள்.) அந்தக் குமார தீர்த்தமானது, குட்டநோயையும் பெரு நோயையும் இரத்தகாச நோயையும் தாக்குகின்ற வலிப்பு நோயையும் துன்புறுத்தும் வாதநோயையும் சார்ந்து உயிரைக் கொல்லும் வயிற்றுவலி முதலிய நோய்களையும் கெடுத்து உடம்புக்கு அழகு செய்வதாகும்.

(வி - ம்.) அக்குமார தீர்த்தம் பல்வகை நோய்களைப் போக்க வல்லது; எனவே அத்தீர்த்தத்தில் மூழ்குவது சிறந்ததாகும். பெரும் பிணி - பெருவயிற்று நோய். குருதி - செந்நீர். கால் - கக்கச் செய்கின்ற. எனவே, இரத்தகாசம்; சயநோய். முயலகன் - வலிப்பு நோய்; முயல்வலிப்பு. அஃதாவது வாயின் இதழ்களை ஒருபக்கம் கோணச்செய்து வாய்திறக்காவாறு துன்புறுத்திவரும் நோய்.
கொல்லி