பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்399

இத்தீர்த்தத்தில் கழுவப்பெற்றால் அத்தீர்த்தம் அந்நோயெவற்றையும் விரைவில் நீக்குவதாகும்.

(வி - ம்.) புழுக்குலம் - புழுக்களின் இனம். ஒருவற்குப் புண்ணுண்டாயவழி அது, ஆறாமல் பன்னிறமும் பல்வடிவங்கொண்ட புழுக்கள் மேலும் மேலும் உண்டாக்குவதியற்கை. இதனை, "இவ்வுடம்பை, "பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை" என்றும், "மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை" என்றும் ஆன்றோர்கள் கூறுமாற்றால் இவ்வுடம்பின் நோய்களும் இழிவும் புலனாம். இத்தகைய புழுக்கூட்டங்கள் பெருகிவாழும் புண் என்பது. "விண்" என்பது ஒலிக்குறிப்பை உணர்த்தும் அணுகரண ஒலி. புண்கறை - புண்ணினின்று வெளிவரும் செந்நீர். "துண்" விரைவுக் குறிப்புணர்த்தும் சொல். இற - ஒடிந்த. வீழ - கெட. மண்ணுதல் - கழுவுதல். மண்ணுறின் - அத்தீர்த்தத்தில் கழுவினால்; எதிர்கால வினையெச்சம். தீர்த்தம் என்னும் தோன்றா எழுவாய் மண்ணுறின் என்னும் பயனிலைநோக்கி வருவிக்கப்பட்டது. வல்லை - விரைவு. மாய்க்கும் - நீக்கும்; பிறவினை. புழுக்கள் வீழ்க்கும் புண்ணாயினும், இரத்தத்தை வடிக்கும் புண்ணாயினும், உறுப்புக்கள் புண்ணால் அழுகிக் கீழே விழும் தன்மையனவாக அழுகிப்போன கைகால் விரல்களில் ஏதாயினும் இக்குமார தீர்த்தத்தில் அவற்றைக் கழுவினால் அந்நோய்கள் யாவும் உடனே தீர்ந்துவிடும். எனவே, அக்குமாரதீர்த்தம் மிக்க பெருமை வாய்ந்ததாகும் என்றபடி.

(28)

 கொலைப்பழி யாலுயிர் குமைக்குஞ் சாயையும்
 அலைப்புறு பூதமு மலகைப் பேதமும்
 மலைப்புற வருத்துமந் திரத்தின் சூழ்ச்சியும்
 உலைப்புறு வனவதி னுவந்து தோய்நர்க்கே.

(இ - ள்.) அக்குமார தீர்த்தத்தி்ல் மனமகிழ்ந்து மூழ்குவோர்க்கு, அது கொலைப் பாவத்தால் உயிரை வருத்துகின்ற பிரமகத்தி தோடத்தையும், துன்புறுத்துகின்ற பூதத்தையும், பல்வேறுபட்ட பேய்களையும், தாக்கி வருத்துகின்ற மந்திரத்தின் வஞ்சகத்தையும், தொலைத்து ஒழிப்பதாகும்.

(வி - ம்.) அக்குமார தீர்த்தம் பூதம் பேய் முதலியவற்றால் உண்டாகும் துன்பங்கள் எல்லாவற்றையும் நீக்கும் என்பதாம்.

கொலைப்பழி - கொலையாலுண்டான பாவம். சாயை - நிழல். நிழல்போல் விடாது பற்றப்படுவதாகிய பிரமகத்தி தோடம். இது, தாய்க்கொலை, பெண்கொலை முதலிய கொடிய கொலை முதலியவற்றைச் செய்தோர்க்குத் தொடருவது. பூதம், அலகைப் பேதம் - பேய்களின் வெவ்வேறுவகை. அவை, கரும்பேய், குறளிப்பேய் முதலிய பல்வகைப் பேய்கள் உள்ளனவாதலால் 'அலகைப் பேதமும்' என்றார். உலகிற்கொலை களவு குடி இணைவிழைச்சு முதலிய தீத்தொழில்களின் கன்றித்திரிந்த தீயோர், இறந்தபின் ஆவி வடிவில் கரிய பெரிய உருவெடுத்துத் தோன்றித் தாம் பயின்ற பொருட்களின்மேல் நுகர ஆசைகொண்டு ஆடு மாடு அறுத்து விற்கும் கொலைக்கூடங்களினும், கூத்திகள் மன்றங்களினும், கள்விற்கும் இடங்களிலும் திரிதருவனவாம். அவை தாமாக நுகர இயலாமையால், உயிருடன் உலகில் வாழ்பவர் உடற்கண் புகுந்து