பக்கம் எண் :

400தணிகைப் புராணம்

நுகர எண்ணி அவரை வருத்துவனவாம். இத்தகைய கொடிய பேய்களின் பிடிப்பை யெல்லாம் இக்குமார தீர்த்தத்தில் ஒருகால் மூழ்குவார் பால் நில்லாது தொலையும் என்பார்ழு, அதில் உவந்துதோய்நர்க்கே உலைப்புறுவன என்றார். மந்திரவாதிகள் தம் மந்திரச் சூழ்ச்சி வன்மையால் தமக்குப் பகைவரைத் துன்புறுத்துதலும், இளமகளிரைவயப்படுத்தி அவர்தம் கற்புநெறியைக் குலைத்துக் கெடுத்தலும் ஆகிய மந்திரவாதிகளின் அம்மந்திரவலியும், இதிற்படிவோர்க்குத் துன்பந்தாராது விலகுமென, இத்தீர்த்தத்தின் பெருமை தோன்றக் கூறினார்.

(29)

 கருக்கொலை தந்தைதாய் கன்னி யந்தணர்
 உருக்கிளர் வீரரா னுதவி கொல்கொலை
 குருக்கொலை யாயினுங் குழைந்து ளாருயிர்
 வெருக்கொளத் தோய்ந்துறின் விளிக்கு மத்தடம்.

(இ - ள்.) மகளிர் கருவைச் சிதைத்தல், தந்தை தாய் இளமங்கையர் பெரியோர் வடிவழகுமிக்க போர்வீரர், பசு நன்றி ஆகியவற்றைக் கொன்ற கொலைப்பாவம், குருவினைக் கொன்ற பாவம் ஆனாலும் இவற்றுக்காக மனம் வருந்தித் தம் நிறைந்த உயிர் அச்சங்கொள்ள அக்குமார தீர்த்தத்தில் மூழ்குவாராயின் அத்தடாகம் அப் பாவங்கள் யாவற்றையும் தீர்க்கும்.

(வி - ம்.) கருக்கொலை - பெண்கள் கருவைச் சிதைத் தழித்தல். கன்னி - இளம் பெண் ; அந்தணர் - நல்லொழுக்கம் அறிவு முதலியவற்றால் சிறந்த பெரியோர். வீரர் - போர்செய்யும் வீரர்கள். ஆன் - பசு. உதவி - ஒருவர் மற்றொருவர்க்குப் பயன் கருதாது செய்யும் நன்மை. குரு - கல்வி கற்பித்த ஆசிரியன். கொல்கொலை - கொன்ற கொலைப்பாவம். முக்கால வினைத்தொகை. ஆயினும், இவைகளில் எப்பாவமானாலும் அதற்காக மனம்வாடி இத்தீர்த்தத்தில் முழ்குவாராயின் அவைகளை இத்தீர்த்தம் தீர்த்து அவரைத் தூய்மையாக்கும்
தன்மையது.

இப்பாவங்கள் யாவற்றையும் காட்டில் ஒருவன் செய்தநன்றியை மறப்பது கொடும்பாவமென்பது, திருவள்ளுவர் துணிபு. அவரருளிய அறத்தில்,

 1 "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
           செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

என்றார்; எந்நன்றி யென்பதற்கு விளக்கமாகப் புறநானூற்றுப் பாடலொன்றிலும், கம்பர் காவியத்தும் விளக்கி விரித்துக் கூறப்பெற்றுள்ளன.

 2 "ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
           மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
           குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
           வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளவென

 1.  திருக்குறள். 
 2.  புறம் : 34.