பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்401

 நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
 செய்தி கொன்றோர்க் குய்தி இல்லென
 அறம்பா டிற்றே."

என்றும்,

 1 "சிதைவகல் காதல் தாயைத் தந்தையைக் குருவைத் தெய்வப்
           பதவிஅந் தணரை ஆவைப் பாலரைப் பாவை மாரை
           வதைபுரி குநர்க்கும் உண்டாம் மாற்றலாம் ஆற்றல் மாயா
           உதவிகொன் றார்க்கென் றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ"

என்றும் வருதலால் இப்பாவங்கள் யாவும் இத்தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு ஒழிதலோடு செய்ந்நன்றி மறந்த பாவமும் ஒழியும் என்று இத்தீர்த்தத்தின் சிறப்புக் கூறிய தறிக.

(30)

 பகைஞரைப் போரிடைப் பணிக்க வேண்டினும்
 அகையுறு நட்பினை யாக்க வேண்டினும்
 மிகைநல மொக்கலின் விளைக்க வேண்டினும்
 தகைபெற முற்றுமத் தடத்துத் தோயினே.

(இ - ள்.) அக்குமார தீர்த்தத்தில் மூழ்கினால் தம் பகைவரைப் போர்க்களத்தில் பணியவைக்க வேண்டினாலும், கிளைக்கின்ற நட்பைப் பெருக்க வேண்டினாலும், மிக நல்லவற்றைத் தம் சுற்றத்தார்க்குச் செய்ய வேண்டினாலும் தகுதி பெற அவைகள் யாவற்றையும் முற்றுவிக்கும்.

(வி - ம்.) அகைத்தல் - கிளைத்தல், அஃதாவது மேலுமேலும் பெருகுதல். அகையுறு நட்பு, மேலும்மேலும் கிளைக்கின்ற நட்பு. ஒக்கலின் - சுற்றத்தார்க்கு. இன் என்னும் ஐந்தனுருபு மூன்றனுரு போடு மயங்கிற்று ; வேற்றுமை மயக்கம். தகை - தகுதி, தோயின் - மூழ்கினால் ; குளித்தல்.

(31)

 புதல்வரை வேண்டினும் புலமை வேண்டினும்
 கதமலை வேண்டினுங் கவிகை வேண்டினும்
 சுதைநிகர் மொழியினர்த் தோய வேண்டினும்
 பதவிகள் வேண்டினும் படியி னல்குமே.

(இ - ள்.) நற்புதல்வரைப் பெற விரும்பினாலும், நல்லறிவினைப் பெற விரும்பினாலும், சினம் பொருந்திய யானையைப் பெற விரும்பினாலும், அரசராக வெண்கொற்றக் குடைக்கீழ் இருக்க விரும்பினாலும், பால்போன்ற இன்சொற்களை யுடைய இளமங்கையர் இன்பம்பெற விரும்பினாலும் இத்தீர்த்தத்தில் மூழ்கினால் அவர் விருப்பப்படி அவற்றை அது தரும்.

(வி - ம்.) கதம்மலை - சினமுள்ள மலை, மலைபோல்வதாகிய யானைக்கு ஆகுபெயர். பிறரும் "கைவரை எனத் தகையகாளை உரை" என்றார். கதம் - சினம். யானைக்குச் சினம் இயற்கையாகலான்,

 1.  கம்பரா. கிட்கிந்தை : 62. 
 2.  கம்பராமா, பால, தாடகை.