| ஆரணன் மாய னரனிப முகத்தன் | | அனங்கனென் றிவர்தொழிற் கெல்லாங் | | காரண மாத றெளித்தருள் கொழிக்குங் | | கன்னியை யுன்னியேத் தெடுப்பாம். |
(இ - ள்.) சிறப்புப் பொருந்திய யாகத்திற்கு நெய் யொழுக்கு மொருவகைக் கருவியும், உருத்திராக்க மாலையும், பாஞ்சசன்னியமும், சக்கரப் படையும், சூலப் படையும், வெற்றிலை வடிவாகச் செய்யப்பட்ட வேற்படையும், போர்க்குப் பொருந்திய பாசமும், தோட்டியும், கருப்பு வில்லும், பூவம்புமாகிய இவற்றை வெவ்வேறாகத் தரித்து, அயனும் அரியும் அரனும் யானைமுகத்தை யுடையவனும் அநங்கனுமென்று சொல்லப்படுகின்ற ஐவர்களியற்றுஞ் செயல்களெல்லாவற்றிற்கும் (சிவ சத்தியாகிய தான்) காரணமாதலை யாவர்க்குந் தெளிவித்துக் கருணைபுரிகின்ற கன்னியாகிய சிவசத்தியை நினைத்துத் துதிப்பாம். (வி - ம்.) ஆரணன் மாயோன் முதலியோர் தொழில்களெல்லாஞ் சிவசத்தியா னிகழ்வனவென்பது வேதாகமங்களின் துணிபாம். இங்ஙனம் நிகழ்வதனை யாவருங்காண இவ்வாயுதங்களே காட்டுமென்பார். வேறு வேறணியா இவர் தொழிற்கெல்லாங் காரணமாத றெளித்தருள் கொழிக்குங் கன்னி யென்றார். இதனால், ஈறிலாதவளாகிய ஒருத்தியே எல்லாச் சத்திகளுமாய் நின்று தொழில் செய்வளென்பது போந்தது; இதனை 'எத்திறம் நின்றானீச னத்திறமவளு நிற்பள்' என்னுஞ் சிவ ஞானசித்தித் திருவிருத்தத்தா (2. 4 - 3.) னறிக; என்றவென்னும் பெயரெச்சத்தகரம் விகாரத்தாற் றொக்கது; சிருக்கு முதலிய பத்தும் அம்மையார் திருக்கரத்தினுள்ளன வென்க. அணியா செய்யாவென்னும் வாய் பாட்டு வினையெச்சம்; அயன் முதலிய ஐவருக்கும் ஆயுதங்களை முறையே யிரண்டிரண்டாகக் கொள்க, தெளித்து - விவ்விகுதி தொக்கு நின்றது; ஏத்தெடுப்பா மென்பது ஒருசொல் விழுக்காடு. (2) ஆபச்சகாய விநாயகர் | பண்ணிய மேந்துங் கரந்தனக் காக்கிப் | | பானிலா மருப்பமர் திருக்கை | | விண்ணவர்க் காக்கி யரதனக் கலச | | வியன்கரந் தந்தைதாய்க் காக்கிக் | | கண்ணிலா ணவவெங் கரிபிடித் தடக்கிக் | | கரிசினேற் கிருகையு மாக்கும் | | அண்ணலைத் தணிகை வரைவள ராபச் | | சகாயனை யகந்தழீஇக் களிப்பாம். |
(இ - ள்.) மோதகத்தைத் தாங்கிய திருக்கரத்தைத் தம் பொருட் டாக்கியும், பிறைச்சந்திரன் போலுங் கொம்பு பொருந்திய திருக்கரத்தைத் தேவர்கள் பொருட்டாக்கியும், இரத்தின கும்பம் வைத்திருக்கும் பெரிய திருக்கரத்தை அம்மையப்பரை வழிபடுதற் காக்கியும், சிறிதுங் |