பக்கம் எண் :

40தணிகைப் புராணம்

அவ்விடங்களிலிருக்கச் செய்து அகலுங் காளையர் செலவைத் தடை செய்யுமாறு தொடங்குதலினால் உதவி செய்தற்கான பாலைநிலத்திற் கொப்பாக வேறொன்றில்லை யென்க.

(வி - ம்.) செலவழுங்குமாறு - விகாரம்; சுரத்துக்கென நான்காவது விரிக்க; சுரம் புணர்தற்கு இனிதாகிய இடமுடைத்தாதலிற் சுரமொப்பில்லை யென்றார்; ஒன்று மென்னுமும்மை தொக்கது. இன்றியென்பது எச்சத் திரிபு; இடையூறிலவாகச் செய்தல் விருந்துவிலக்கல் முதலியன.

(57)

 பிரிந்தவர் பசலையம் பெரிய போர்வையுட்
 டிருந்துவ ரென்னத்தன் செய்கை தோற்றியாங்
 கரந்தைசெய் மதன்கணை யாகப் பூத்தமா
 மரந்தழீஇ யதுநலம் வளாய பாலையே.

(இ - ள்.) இன்பங்கலந்த பாலையானது முன்னர் விதி தம்முட்கூட்ட வெதிர்ப்பட்டுப் புணர்ந்து இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனா மென்றஞ்சிப் பின்னர்ப் பிரிந்த தலைவிமார்கள் பசலையாகிய பெரிய போர்வையினுள் மூழ்குவரென்று பொருணூல் கூறுகின்ற தன்றொழிலைப் பிறர்க்குத் தோன்றும்படி செய்தாற்போலப் பிரிந்த காலத்துத் துன்பங்களைச் செய்கின்ற மன்மதன் கணையாகப் பூத்தலைச் செய்த மாமரங்களைத் தழுவியது.

(வி - ம்.) தன் னென்றது ஈண்டுப் பாலைநிலத்தை; தோற்றி - தோற்றுவிக்க; 'தோன்றா தோற்றி' என்றாற்போலக் கொள்க; மாபிரிந்தவர்க்குப் பசலையை யுளவாக்கித் துன்பஞ்செய்து மீண்டும் புணர்தற் கேதுவாகலின் இடத்து நிகழ்பொருளின் றொழிலை இடத்தின்மேலேற்றித் தன் செய்கை தோற்றியாங்கெனக் கூறினார். மதன்கணை மாமலரென்பதனை 'முல்லை யசோகு முழுநீலஞ் சூதப்பூ' எனக்கூறி யிருத்தலானறிக. பிரிதலும் பிரிதனிமித்தமும் பாலையாகலின் களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாகாமைப் பிரிதல் இன்பமாகவும் பிரிதனிமித்தம் துன்பமாகவுங் கொள்க. பசலை - பசத்தல்; இது கண்ணாடி மண்டிலத்தில் வாயினாலூதிய ஆவிபட்டு அம்மண்டிலம் மழுக்கமடைவது போலத் தலைவியின் முகத்திலுள்ள ஒளி தலைவனைப் பிரிதலால் மழுங்கித் தோன்றுதல். இதனைப் பொன்னெனவும் பீர் எனவும் உரைப்பார். "வெண்மண லெக்கர் விரிதிரை தந்தநீர், கண்ணாடி மண்டலத்தூதாவியொத்திழியுந், தண்ணந்துறைவர் தகைவிலரே தற்சேர்ந்தார், வண்ணங் கடைப்பிடியா தார்" என்னுஞ் செய்யுளானு மிதனை யறிக. திருந்துதல் - இலக்கணை, ஈண்டு மூழ்குதலின் மேற்று.

(58)

முல்லை

வேறு

 ஆக்கங் கருதித் துணைநீங்கவன் னோர்கி ளந்த
 வாக்கின் படிமங் கையராருயி்ர் வாழ்ந்தி ருக்கை
 காக்குந் தொழிலென் றுபுரக்குமக் கண்ணற் கன்பு
 பூக்குஞ் செயலாற் பொலிவுள்ளது பூத்த கானம்.