பக்கம் எண் :

408தணிகைப் புராணம்

தாம் எண்ணியன முடிதற்குத் தற்கால வழிபாட்டுக்குரியதாய் மண் முதலியவற்றால் அமைக்கப்பட்ட கடவுள் உருவில் மனம்பொருந்தி யோகநிலையில் ஓர் இரவு தங்கப் பெற்றால், அளவற்ற பெரும்பயனானது உள்ளங்கைக்கண்ணுள்ள நெல்லிக்கனிபோல் ஐயமறக் கிடைப்பதாகும்.

(வி - ம்.) கணி - வேங்கைமரம் : அதன் பூவுக்கு ஆதலால் முதலாகுபெயர். வரை - மலையின்மேலிடம். கலை - ஆண்குரங்கு. இதை முசுக்கலை என்பர். குப்புறும் - தாவுகின்ற. கணிக வெற்பு - திருத்தணிகை மலை. கணிகம் - தற்கால வழிபாட்டுக் குரியதாய் மண்முதலிய வற்றால் ஆக்கப்பட்ட இலிங்கம் போன்ற கடவுள் உருவங்கள். இருப்பு - இருக்கை. யோகஞ் செய்தற்கு பதுமாசனம் முதலியன கொண்டிருந்து மனத்தை ஒருவழிப்படுத்தி மூச்சொடுக்கி இருக்கும் மனம் ஒன்றுபட்ட நிலை. கணிதம் - கணக்கு, அளவு. கைக்கண் நெல்லி - உள்ளங் கைக்கண் கொண்ட நெல்லிக்கனி. அது தன் உள்ளிடத்துள்ள தன்மையை விளக்கித் தெளிவாக்குதல் போல இத்தலத்தில் துன்பந்தரும் பாவங்கள் யாவும் ஒருங்கே கெடுதலும், அளவற்ற நற்பயன் எய்துதலும் தெளிவாகக் காட்டும் என, உவமத்துக் கேற்பக் கூறுக.

அன்றி நெல்லிக்கனியைப் பிற்காலத் தெழுந்த நூல்கள் யாவும் அங்கையின் நெல்லிபோல என்று சுட்டிச் சொல்வதை நோக்கின் நெல்லிக்கனி கிட்டற்கரிய தொன்றாகக் கொள்ளக்கிடக்கின்றது. நெல்லிக்கனி கிட்டுதல் அருமைப் பாடாக இருத்தல்போல, மிக அரியபொருள் கிடைத்ததாயின் நெல்லிக்கனி கிடைத்தல் போன்ற தன்மையாகக் கருதுதல் வேண்டுமெனக் கொள்ளவைத்ததாகவும் அறியக்கிடக்கின்றது. இச்சிறப்பானே, நெல்லிக்கனி கிடைப்பதரிதென்பது புலனாகின்றது. பிறவேறு மரங்களில் காயும் பழமும் உள்ளன. நெல்லிமரம், காய் மட்டும் தருதலைக் காண்கின்றோம். நெல்லிக்காய் விற்றலன்றி பழம் விற்பனைக்கு வருதலை யாண்டும் காண்கிலேம் ஒரோவொருகால் எங்கேனும் அரிதாகப் பழுக்கும் போலும். அதன் நிறம் கருமையாக இருக்குமெனக் கருத இடனுண்டு. ஒருகால் அதிகமா னெடுமானஞ்சிக்கு அரிதிற்கிடைத்த கருநெல்லிக் கனியைத் தான் உண்ணாது, ஒளவையாருக்கு ஈந்தனன் என்ப. அதை உண்டு ஒளவை மூதாட்டியார் நோயின்றியன்ற யாக்கையராய்ப் பன்னெடுங்காலம் வாழ்ந்திருந்தனர் என்ப. அரிய நெல்லிக்கனியைத் தமக்கு ஈந்த அஞ்சியைப் பாராட்டி அதுகாலை ஒளவையார் கூறியதாக,

 1 "போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி
           பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
           நீல மணிமிடற் றொருவன் போல
           மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
           பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
           சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
           தாதல் நின்னகத் தடக்கிச்
           சாதல் நீங்க எமக்கீத் தனையே"

 1.  புறம் : 91.