பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்409

என்னும் பாவினான் இவ்வரலாறு துணியப் பெறுகின்றது. ஆகலான், நெல்லிக்கனி கிட்டற் கரிய பொருளாக இருந்தமை புலனாகின்றது.

(40)

 காழ்படு முளத்தினான் கணிக வெற்பென
 ஊழ்பட வொருமுறை யுரைப்ப னாயினும்
 பாழ்படும் பஃறிறப் பாவக் குப்பையும்
 வீழ்பதம் யாவையும் விரைவிற் சூழுமே.

(இ - ள்.) கருமை பொருந்திய மனத்தையுடைய ஒருவன், திருத்தணிகை மலையென்று முறைமைபெற ஒருகால் சொல்வான் ஆனாலும், பாழாக்குகின்ற பலவகையான பாவக்கூட்டங்களும், நீங்குகின்ற பக்குவம் வாய்ந்த துன்பங்கள் எல்லாமும் விரைவில் சுற்றியோடும்.

(வி - ம்.) காழ் - கருமை. கருமை நிறம்பொருந்திய அறியாமைக்கு ஆகுபெயர். அத்தகைய உள்ளத்தை யுடையான் ஒருமுறை திருத்தணிகை மலையென உரைத்தால் பாவங்களும் துன்பங்களும் ஒழிதல் ஒருதலை எனக் கூறினார். பாழ்படும் - கெடுக்கும் என்பது. இங்கே தன்வினை பிறவினைப் பொருள். வீழ்பதம் - கெடுகின்ற செவ்வி. சூழும் - சுற்றியோடும் என்பது, தெரியாமலே ஓடிவிடும்.

(41)

 கற்பம்வந் தழிக்கொணாக் கற்ப சித்தெனும்
 பொற்புறு மத்தகு பொருப்பைப் போற்றுறின்
 எற்பட வெழுமுணர் விடைய ழித்துறும்
 அற்பட வறுமுக னருள்க லக்குமே

(இ - ள்.) ஊழிக்காலம் வந்தும் அழிக்க இயலாத கற்பசித்து என்னும் பெயரையுடைய அழகு பொருந்திய அந்தச் சிறப்புப் பொருந்திய திருத்தணிகை மலையை வணங்கப் பெற்றால், விளக்கம்பெற உண்டாகின்ற உணர்வினை இடையே வந்து அழிக்கின்ற தான அறியாமையாகிய இருள்நீங்க, ஆறுமுகங்களையுடைய முருகப்பெருமானின் அருள் வந்து சேரும்.

(வி - ம்.) கற்பம் - ஊழிக்காலம். பிரமனுக்கு ஒருநாள் என்றும் உலகம் முடிவுகாலம் என்றும், நானூற்று முப்பத்திரண்டு கோடி ஆண்டுகளென்றும், ஆயிரங்கோடி யாண்டுகளென்றும் கூறுப. உலக முடிவு காலத்தினும் அழியாதது, அத்திருத்தணிகைமலை. அது, கற்ப காலத்தும் அழியாத பேறு முருகன் அருளால் பெற்றமையால் "கற்ப சித்து" எனப் பெயர் பெறுவதாயிற்று. இத்தகையது திருத்தணிகைமலை. இக்கருத்தை,

 "வான்கெட்டு மாருத மாய்ந்தழல்நீர் மண்கெடினும்
           தான்கெட்டல் இன்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு"