| அண்ணல், தணிகைமலையை வணங்குவார்க்கு நல்லுணர்வைக் கெடுக்கும் அறியாமை இருளைக் கெடுத்து அருளுவன். இதனை, ஈண்டு, "உணர்வு இடை அழித்துறும், அற்பட அறுமுகன் அருள் கலக்குமே" என்றார். எல் - ஒளி : நல்லறிவைக் கெடுப்பதாகிய அறியாமையை அல் என்றது நல்வழியிற் செல்லவிடாத, தன்மைநோக்கி. வள்ளுவர் பெருமானும் அறியாமையைக் "காரறிவு" என்பர். (42) | | நால்வகைப் பயனையு நாடி னார்பெற | | | மூலமாய் நின்றவம் மூல வெற்பினைச் | | | சீலரா யுள்ளகஞ் சிந்தை செய்யினும் | | | பாலுறீஇப் பயனெலாஞ் செவ்வி பார்க்குமே. |
(இ - ள்.) மக்கட் பிறப்பால் அடையவேண்டிய நான்கு வகைப்பட்ட பயன்களையும் அடைய நாடினவர் பெறுதற்கு முதன்மையாக நிற்பதாகிய அந்தப் பழமையாகிய தணிகைமலையை ஒழுக்கமுடையராய் மனத்திடத்து நினைந்தாலும் அவரை நல்லூழ்சார்ந்து நற்பயன்யாவும் அவரைச் சார்தற்குரிய காலவாய்ப்பை எதிர்பார்த்து நிற்கும். (வி - ம்.) நால்வகைப் பயன் : அறம் பொருள் இன்பம் வீடுபேறு. இவை மக்கட் பேறெய்தினார் யாவரும் பெறற் குரியனவாம். இவற்றைப் பெறப் பழமைக் காலந்தொட்டு நிலை பெற்றுள்ளது அத்திருத்தணிகை மலை. இதை நினைப்பினும் அவர் பால் நல்லனயாவும் காலம் பார்த்திருக்கும் என்றமையால் அதைச்சார்ந்து வணங்குவோர் மங்கல வினைகள், பிணிவாராமை, நீண்ட வாழ் நாள் பெற்று, இறுதியில் வீடு பேறுற்று இன்பந் துய்ப்பர் என்ற வாறாயிற் றென்க. மூலம் - முதன்மை; பழமை என்னும் பொருளது, சீலம் - ஒழுக்கம்; அஃதாவது சரியை கிரியை யோகம் ஞானமாகியன நிலைபெற நடப்பது. உள் அகம் - உள்ளேயுள்ள இடம், அஃதாவது, மனம், சிந்தை செய்தல் - நினைத்தல். பால் - ஊழ்; நல்லூழ் செவ்வி - தருணம் ; காலத்தின் அற்றம் பார்த்தல் ; சமயம் நோக்கி யிருத்தல். பயன் - நல்லூழ்; இயற்கைப் பொருள்; அறிவில்லாதது அது, நற்பயன் தருவது குறித்துக் காலம் பார்த்திருப்பதாகக் குறித்தார். இவ்வியற்கைத் தன்மையை ஆசிரியர் தொல்காப்பியனார், | | 1 "உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல் | | | மறுத்துரைப் பதுபோல் " |
எனக் கூறிய பகுதிக்கண் "உணர்வுடையது போல்" என்ற விதியில் அடக்குக. வள்ளுவரும் தம் அறநூற்கண், | | 2 " கதங்காத்துக் கற்றடங்க யாற்றுவான் செவ்வி | | | அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து " |
என்றும், | | 3 "அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் | | | தவ்வையைக் காட்டி விடும் " |
என்றும் கூறுவன, இக்கருத்துக்கு அரண் செய்தல் காண்க. (43) | 1. | தொல். பொருள். பொருளியல் :2. 2, 3, திருக்குறள். |
|