பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்411

 சீபரி பூரண கிரியைச் சேர்ந்தவண்
 வீபவ ரிழிஞரே யானும் வீழிவாய்
 மாபயின் மார்பனுஞ் சமழ்ப்பின் மாழ்குற
 ஆபவான் மலமொரீஇ யருளி னெல்லையே.

(இ - ள்.) அருட்செல்வம் நிறைந்த மலையாகிய அத்திருத்தணிகை மலையைச் சேர்ந்து ஆங்கு இறப்பவர், கீழ்க்குலத்தினராயினும் வீழிக்கனியைப் போன்ற செந்நிற வாயையுடைய திருமகள் தங்கியிருக்கின்ற திருமாலும் நாணத்தால் அறிவு மயக்கங் கொள்ளப் பண்டு தொடர்ந்த ஆணவமலம் முதலிய மலங்கள் யாவும் நீங்கப்பெற்று முருகப்பெருமான் அருளினது வரம் பாகிய வீட்டுலகத்தை அடைவர்.

(வி - ம்.) சீபரிபூரணம் ஸ்ரீபரிபூர்ணம் என்னும், சொல்திரிபு ஸ்ரீ - திரு. செல்வம் எல்லாச் செல்வத்தினும் முதற்கண் நிற்கும் செல்வம் அருட்செல்வமாகலான் அருட்செல்வ மெனப் பொருள் கூறப்பட்டது.

 1 "அருட்செல்வம் செல்வத்துட் செல்வம்"

என்னும் தேவர் மறைக் கருத்தும் ஈண்டு நோக்கத் தக்கது. பரிபூரணம் நிறைவு. பொருட் செல்வமல்லாத செல்வமாகலான் கொளக் கொளக் குறையாமையால் நிறைவதாயிற்று. எனவே திருநிறை மலை யென்பது திருத்தணிகை மலைக்குப் பெயராயிற்று. வீதல் - இறத்தல். வீபவர் - இறப்பவர், 2 "காதலன் தன் வீவும்" என்புழி அஃதிப்பொருட்டாதல் காண்க. இழிஞர் - தாழ்ந்த குலத்தினர்; அன்றி அறிவால் இழிந்தவர் என்றலுமாம். வீழி - அதன் கனிக்கு ஆகுபெயர். வீழிவாய் உவமத்தொகை. மா - திருமகள், திருமால் திருமகளை மார்பில் கொண்டனர் என்பது புராணமரபு. இதனால் 'திருமறு மார்பன்' என்னும் பெயர் வழங்கும். சமழ்ப்பு - நாணம், வெட்கம். மாழ்கல் - மயங்குதல். ஆப - ஆவர். பலர்பாற் படர்க்கை. திருமால் தன் வைகுந்தத்தினும் சிறந்த தில்லை யெனக் கொண்டிருந்த தன்மையால், இவர்கள் எவ்வுலகத்தினும் சிறந்த வீட்டுலக நெறியடைந்தமையால் நாண முற்றனர். மலம் - ஆணவம். மாயை காமியம் என்னும் மும்மலத் துன்பம். இவை நீங்கவே வீட்டுலகம் கிட்டுமாகலான் 'மலமொரீ இ' என்றார். இதனை மணிமொழிப் பெருமானும் 3 சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை யாண்ட அத்தன்' என்பர். ஒரீஇ : சொல்லிசையள பெடை.

(44)

 அல்லகாத் திரியென வரற்றி னோர்முறை
 நல்லகாத் திரிவன விரித்து நாடமர்
 வல்லகாத் திரத்தினுஞ் சவட்டு மான்கடாய்
 எல்லகாத் திருப்பதிக் கிறைமை பூண்பரே.

(இ - ள்.) தீமைகளினின்றும் பாதுகாத்து அவைகளை ஓட்டி யருள்க வென்று ஒருமுறை கூறி முறையிட்டழுதால், நல்லனவற்றையீந்து, நீக்கவேண்டும் தீமைகளைக் கெடுத்து, விரும்பும் போரில் வல்லமையுள்ள முன் கால்களினாலும் கொல்லுகின்ற வெள்ளையானையின்

 1.  திருக்குறள் : 130, 167, 241. 
 2.  சிலப், 
 3.  திருவாசகம், அச்சோ. 1.