பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்413

(இ - ள்.) மலங்களாகிய இருளைப் போக்குதலால் அத்திருத்தணிகை ஞாயிற்றை ஒத்ததாகும்; அறிவு மயக்கத்தைத் தரும் நோய்களைக் கெடுத்தொழித்தலால் மருந்தினை ஒத்ததாகும்; வேண்டிய வேண்டியாங்குப் பல்வகைப் பொருள்களையும் போகங்களையும் உண்டாக்கித் தருதலால், புகழையுடைய சிந்தாமணியும் கேட்டவற்றையெல்லாம் தருகின்ற ஐந்து தருக்களையும் இருவகை நிதிகளையும் காமதேனுவையும் உடைய இந்திரனுலகை ஒத்ததாகும்.

(வி - ம்.) இரவி - ஞாயிறு. மருள்பிணி - மயக்கத்தைத் தரும்பிணி; துமித்தல் - துணித்தல்; கெடுத்தல். பொருள் - விரும்பிய பொருள்கள். சிந்தாமணி, ஒருவனுக்கு விரும்பியவற்றையெல்லாம் தரும் ஒருவகைக் கல். தரு - அரிசந்தானம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என்னும் ஐந்து மரங்கள். நிதி - சங்கநிதி, பதுமநிதி என்னும் சங்கு வடிவத்தினும் தாமரை வடிவத்தினும் அமைந்த இருவகைப் பொருள்தரும் கருவிகள். தேனு - பசு. இதுவும் மேற்குறித்த பொருள்களும் எவரெவர் எதையெதை விரும்புகின்றனரோ அதை அதைத் தவறாது கொடுக்கவல்லன வென்பர். இக்கருத்தை,

 1 "சிந்தா மணிதெண் கடலமிர்தம் தில்லை யானருளால்
           வந்தால் இகழப் படுமே "

என, மணிமொழிப் பெருமானும்,

 2 "சங்கநிதி பதுமநிதி இரண்டும்தந்து தரணியொடு வானாளத்
            தருவரேனும், மங்குவார் அவர்செல்வம் மதிப்பேம் அல்லேம் "

எனத், திருநாவுக்கரசரும்,

 3 "மதுமழை பிலிற்றிப் புதுமணம் விரித்துப்
           பற்பல உதவும் கற்பக தருவும்
           நந்தா வளனருட் சிந்தா மணியும்
           வாமமா மேனிய காம தேனுவும்
           அருளிய ஏவல் வரன்முறை கேட்பக்
           கின்னரர் விபஞ்சி நன்னரம் புளரா
           இசையமு திருசெவி மிசையெடுத் தூற்ற
           இந்தி ராணி வந்தரு கிருப்ப
           கருமுகில் ஆயிரம் திருமலர் பூத்துச்
           செங்கதிர்ச் சேகரம் தங்கவீற் றிருக்கும்
           பெருந்திறன் கடுப்ப இருந்துவிண் புரக்கும்
           அண்ணல் புரந்தரப் பண்ணவன் அரசு "

எனப், பட்டினத்தாரும் அருளுமாற்றால் தெளிக.

உம்மை : செவ்வெண்ணாக வந்தது. பெயர்களோடு கூட்டிப் பொருள் கொள்க. ஆலும், ஏயும் அசை நிலைகள்.

(47)

 1.  திருக்கோவையார் : 
 2. திருநாவுக்கரசர், 
 3. திருக்கழுமல.