| | குணங்கரும் விருச்சிகங் குலாவு மாரனாள் | | | குணங்குறி கடந்தவக் குமரன் றாட்டுணை | | | வணங்குறி னெழுபவ மல்லற் செல்வமோ | | | டிணங்குமந் தணர்களாய் முத்தி யெய்துவார். |
(இ - ள்.) மனத்தடுமாற்றத்தைத் தவிர்க்கின்ற கார்த்திகைத் திங்களில் விளங்குகின்ற கார்த்திகை நட்சத்திரத்தன்று அங்க அடையாளங்களைக் கடந்த முருகப்பெருமானின் திருவடிகளை வணங்கப்பெற்றால், மேல் வருகின்ற பிறவியில் வளப்பம் பொருந்திய செல்வத்தோடு பொருந்திய அந்தணர்களாக இருந்து இறுதியில் வீடுபேறெய்துவர். (வி - ம்.) குணங்குதல் - மனத்தடுமாற்றம். குணங்கு என, கடைக்குறைந்து நின்றது, முதனிலைத் தொழிற்பெயர். மனத்தடுமாற்றத்தைக் கெடுக்கின்றதான கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கலுறுவார் மறுபிறப்பில் எல்லாச் செல்வமும் பெற்று அந்தணத்தன்மை பெற்று வீடுபேறடைவார் என, அத்திருநாள் மேன்மையை யெடுத்து விளக்கியவாறு. விருச்சிகம் - தேள்; அதற்குரிய கார்த்திகைத் திங்களை உணர்த்திற்று, ஆரல் நாள் - கார்த்திகை நட்சத்திரம். ஆரல் - அழல்; தீக்குரிய நாள் என்ப. ஆண்டவன் முழுமுத லொருவனாகலான் "குணங்குறி கடந்த அக் குமரன்" என்றார். (48) | | அருடரு மாறெழுத் தாங்க ணோதுவோர் | | | முருகன துருக்கொடு முன்னி வாழ்வரால் | | | இருவகை யயனத்திற் பதமி றைஞ்சுநர் | | | மருமலர்க் கடப்பினான் மருங்கி ருப்பரால். |
(இ - ள்.) முருகப்பெருமான் திருவருளைத் தருகின்ற ஆறெழுத்தாகிய அருமறையை அத்திருத்தணிகைக்கண் ஓதுகின்ற அன்பர்கள், முருகப்பெருமானது உருவத்தையே நினைந்துகொண்டு வாழ்கின்ற தன்மை வரப்பெறுவோராவர்; வடக்குவழி தெற்கு வழியாகவுள்ள இருவகை வழிகளினும் தனித்தனியே ஞாயிறுபோல் வாழ்கின்ற ஆண்டிற்பாதி துவங்குங் காலத்தில் முருகப்பெருமான் திருவடிகளை வணங்குவோர், மணங்கமழ்கின்ற கடப்பமலர் மாலையை யணிந்த முருகப்பெருமானது பக்கத்திலே இருந்து வாழும் பேறு பெறுவோராவர். (வி - ம்.) ஆறெழுத்து - முருகப்பெருமானின் ஆறெழுத்தாகிய மந்திரம் அது, "சரவணபவ", அல்லது "முருகா போற்றி" என்னும் ஆறெழுத்து. இவ்வெழுத்துத் தொடர் இரண்டில் ஒன்றை விடாது பற்றி முருகப்பெருமான் திருவடி மறவாச் சிந்தையராய் ஓதுவார்க்கு அவர் நினைந்த துணையானே மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி" முன்னின் றருளுவன். அவ்வுரு கரவாது மனத்தில் நிலைக்க அதையே நினைந்து வாழ்வராகலின், "உருக்கொடு முன்னி வாழ்வர்" என்றார். இவ்வாறெழுத்தை வடமொழியாளர் "சடாச்சரம்" என்ப. நம் தமிழ் மொழிகள் புலவர் பெருமகனாகிய நக்கீரர் "ஆறெழுத் தடக்கிய அருமறைக்கேள்வி" யெனக் கூறுவர். அயனம் - ஆண்டிற்பாதி. இதனை உத்தராயணம், தட்சணாயனம் என வடநூல்களில் கூறப்படும். |