பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்415

இதனைப் பெரும் பொழுதில் அடக்கிக் கூறுவர். ஆசிரியர் தொல்காப்பியனார். ஆடித்திங்கள் தொடங்கி மார்கழித் திங்கள்வரை ஞாயிறு கீழ்த்திசையின் தென்கோடியில் தோன்றுதலால் தட்சணாயன மென்றும் தைத் திங்கள்முதல் ஆனித்திங்கள்வரை ஞாயிறு கீழ்த்திசையின் வட கோடியில் தோன்றுதலால் உத்தராயண மென்றும் வழங்குவர். இவை தொடக்க முறுங்காலத்தில் முருகப்பெருமான் திருவடிகளை வணங்கப் பெற்றால் முருகப்பெருமான் பக்கத்திருந்து அவனை வழிபடும் பெறற்கரும்பேறு பெறுவார் என்பார். "இருவகை அயனத்தில் . . . . மருங்கிருப்பர்" என்றார். இதனால் ஆறெழுத் தோதுவோர்க்கும், அயனத்தில் தொழுவோர்க்கும் வரும்பயன் கூறப்பட்டது.

(49)

 கணிகையர் விழைவினாற் காரி யத்தினால்
 தணிகையை யடைந்தவன் சரணந் தாழ்நரும்
 மணிமரு ளுருக்கொடு மறுபி றப்பினில்
 அணிமிகு கந்தலோ கத்தை யண்முவார்.

(இ - ள்.) விலைமகளிரின் மேற்கொண்ட ஆசையினாலும், வேறு பல தொழில் முறைகளாலும், திருத்தணிகையைச் சார்ந்து அந்த முருகப்பெருமானின் திருவடிகளை வணங்குவோருங்கூட, அடுத்த பிறவியில் ஒளியுள்ள வைரமணியை யொத்த ஒளியுடம்பு பெற்று அழகு மிக்க கந்தவுலகைச் சார்ந்தின்புறுவர்.

(வி - ம்.) கணிகையர் - தம் போகத்தை ஆடவர்க்கு விலைக்குக் கொடுத்து வாழும் வரைவில்மகளிர். காரியம் - செய்கின்ற தொழில்கள். அவை வணிகத்தாலும், பல்வகை அலுவல்களாலும் செல்லும் தன்மை. சரணம் - திருவடிகள். தாழ்நர் - வணங்குவோர். முருகப் பெருமான்பால் பத்தியின்றி வணங்குவோர். உம்மை : உயர்வு சிறப்பின்கண் வந்தது. மருள் : உவமவுருபு, மணி, ஈண்டுக் களங்கமற்ற வெள்ளிய ஒளியினால் சிறப்புப்பற்றி வைரமணியை உணர்த்திற்று. அண்முதல் - சேர்தல். அண்முவர் - சேர்ந்தின்புறுவர.

(50)

வேறு

 மறைக ளாகமம் வண்கயைவ்வயின்
 நிறைய நல்குநர் நீடிரும் போகமும்
 அறிவு மாயுளு மற்கிய செல்வராய்ப்
 பறைய மும்மலம் பாயரு ளாபவே.

(இ - ள்.) நான்குமறைப் பொருள்களையும் ஆகமப் பொருள்களையும் வளப்பம் பொருந்திய கலைகளின் உட்பொருளையும் விரும்புவார்க்கு அத்திருத்தணிகைக்கண் நிறைய எடுத்து விளக்கிச் சொல்வோர், நீண்ட பெரிய இன்பமும் பேரறிவும் நீண்டஆயுளும் நிலைபெற்ற செல்வமுமுடையராய், மூன்றுமலங்களும் தேயப்பெற்றுப் பரந்த முருகப்பெருமான் திருவருளைப் பெறுவர்.

(வி - ம்.) மறைகள், ஆகமம், வார்கலை என்பன, அவற்றின் பொருள்களுக்கு ஆகுபெயர். வயின் - இடம், அ : பண்டறிசுட்டு. திருத்தணிகையைக் குறித்தது. நல்குநர் - நூற்களின் பொருட்களை விரித்துரைக்கும் பேரறிஞர். நீடிரும் என்னும் அடையை, போகம்,