பக்கம் எண் :

42தணிகைப் புராணம்

(வி - ம்.) மால் விடை - விண்டுவாகிய இடபம்; துணர்த்தல் - கொத்தாக விருத்தல்.

(61)

 விலகா விறன்மா லறிந்தோர்விளை யாட லாற்றாற்
 பலமா யவுருக் கொடுநின்றொளிர் பான்மை போலாம்
 மலரா னிறைகொன் றையலங்கிய சூழ லெல்லாம்
 புலரா மதுமா மலர்பூவைகள் பூத்த காட்சி.

(இ - ள்.) பூக்களானிறைந்த கொன்றை மரங்கள் விளங்கி நிற்குமிடங்களினெல்லாம் புலராத தேன் பொருந்திய கரிய பூக்களைக் காயா மரங்கள் பூத்திருக்குந் தோற்றமானது நீங்காத வலிமைபொருந்திய திருமால் (உருத்திர கணங்கள்பற்றிக் கொடுபோக வந்த சூழ்ச்சியை) அறிந்து ஒப்பற்ற திருவிளையாட்டின் முறைமையால் பலவாகிய மாய வடிவைக்கொண்டு நின்று விளங்குந் தன்மை போலாகும்.

(வி - ம்.) அறிந்து - உருத்திர கணங்கள் பற்றவந்ததைத் தெரிந்து; அலங்கிய - விளங்கிய; மா - கரிய; காட்சி - தோற்றம்; மாயம் - வஞ்சனை.

(62)

 இருந்தைக் குவையொத் தனபூவைக ளீண்டு கோபந்
 திருந்துத் தழலொத் ததுகொன்றைகள் செம்பொ னொத்த
 பெருந்தூட் குவையொத் தனபூத்த பிடாம ரங்கள்
 பொருந்தேர் முகிலொத் ததுபொற்றொழில் வல்ல கொல்லன்.

(இ - ள்.) (அம் முல்லைநிலத்தில்) காயாமரங்கள் கரிக்குவியலை யொத்திருந்தன; ஆண்டுப் பொருந்திய இந்திரகோபம் செந்நிறமாகிய அக்கினியை யொத்தன; கொன்றைப் பூக்கள் செம்மையான பொன்னை யொத்தன; பூத்திருக்கும் பிடாமரங்கள் நெருங்கிய தழன்மேன் மூடிய நீற்றின் குவியலை யொத்தன; அழகுபொருந்திய மேகம் பொற்றொழில் செய்தலில் வன்மையுடைய கொல்லனை யொத்தது.

(வி - ம்.) இருந்தை - கரி; பூவையுங் கொன்றையு மாகுபெயர்; பிடா - ஒருவகை மரம்; முல்லையும் பிடவுந் தளவும் என்று எடுத்துக் காட்டிய தொல்காப்பிய வுரையான் அறிக. தூள் - குவை; தூட்குவை - தழன் மேன்மூடியபொடி; பிடாப்பூ வெண்ணிற முடையதாம்; பொன் முதலியவற்றைக் கூட்டுதற்குக் கொல்லன் காரணமாதல்போல இவ் வளங்கள் நிகழ்தற்குக் காரணம் மேகமாதலின் தொழிலுங் குணமும் பற்றிய வுவமை; இக்கருத்து "இருள்கிழிப் பதுபோன் மின்னி வானந், துளிதலைக் கொண்ட நளிபெய னடுநாள், மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம், பொன்னெறி பிதிரிற் சுடர வாங்கிக், குரும்பி கெண்டும் பெருங்கை யேற்றை, யிரும்புசெய் கொல்லெனத் தோன்று மாங்கண்" என்னும் அகப்பாட்டு; (72) அடிகளிலொருவா றமைந்திருத்தல் காண்க. பொற் கொல்லன், கரியும் தழலும் பொன்னும், தூட்குவைகளும் வைத்துத் தொழில் செய்வதுபோலத் தோன்றியது
என்க.

(63)

 விரிகான் மலர்வா சநுகர்ச்சி விழைந்து தத்த
 முரிநா சியொன்றா லமையாதுலப் பற்ற நாசி