பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்421

தொழுது உண்மையுணர்வு வலியுடையனாகிய முருகப்பெருமானையும் சார்ந்து வழிபடுவோர்.

(வி - ம்.) வான் - வானிடம். வரை - மலை. மேகமண்டிலம் வரை உயர்ந்திருப்பதாகலான் அச்சிறப்பு நோக்கி, வானளாவிய மல்லல் வரை யென்றார். அருளா, தொழா என்பன செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். அச் சகாயன் - அந்தச் சகாயன். பண்டறி சுட்டாக அத்தல விநாயகராகிய ஆபத்துச் சகாய விநாயகரைச் சுட்டிநின்றது. ஓடு : மூன்றனுருபு; உடனிகழ்ச்சி. ஈனம் - துன்பம்; நோய் வறுமை முதலியவற்றான் வரும் துன்பங்களும் பிறவித் துன்பமுமாம். குமார லிங்கம்; அத்தலத்து இறைவன் திருவுருவாகிய இலிங்கம். ஞானசத்திதரன் - ஞானசத்தியைத் தரித்தோன். அஃதாவது உண்மையுணர்வு, மெய்யறிவுடையோன் என்பதாம். பிறர்விளக்க விளங்கா இயற்கை யறிவினனாதலால் இவ்வாறு கூறப்பட்டது. நண்ணுவோர் - சென்று வணங்குவோர் என்று பொருள் கொள்க.

(62)

 எண்ணில் புண்ணிய மெண்ணில்பல் லூழிகள்
 பண்ணு மப்பயன் பற்றுவர் வேதனை
 அண்ணன் மாலைய ளித்துநி றுவுதற்
 கெண்ணின் மற்றஃ தெண்மைய வர்க்கரோ.

(இ - ள்.) அளவுகடந்த அறங்களையெல்லாம் கணக்கிலடங்காத பல ஊழிக் காலங்களில் செய்த அவ்வறப்பயனால் வரும் பயன் யாவும் எய்தப் பெறுவர்; அஃதன்றியும் நான்முகனைப் பெருமைமிக்க திருமாலை இறவாது பாதுகாத்து நிலை நிறுத்திவைக்க நினைந்தாலும் அத்தகையோர்க்கு அச் செயல் மிக எளிமையானதாகும்.

(வி - ம்.) மற்றும்; அரோவும் அசை நிலைகள். புண்ணியம் - நல்லறம். ஊழி - உகமுடிவு. வேதன் - நான்முகன். மால் - திருமால். அளித்து - பாதுகாத்து, ஒருவர் மற்றொருவரைப் பாதுகாப்பதாயின், காப்போர் காக்கப்படுவோரின் மேனிலையரா யமைதல் வேண்டுவதால், மக்களைக் காத்தான் என்றால் தாய் தன் மகார்களினும் அகவையாலும் அறிவு ஆற்றல் முதலியவற்றானும் சிறந்திருந்தமையாலன்றோ ? அஃதொப்ப நான்முகனையும் திருமாலையும் காக்கும் ஆற்றல் முருகப்பெருமான் திருவருள் பெற்றோர்க்கு அரிதன்று; மிக எளிமையாகும் என்றபடி. இப்பாட்டுடன் குளகம் நிறைவுறுகின்றது. இக்கருத்தை யொப்ப,

 "ஐயன தருளைப் பெற்றோர்க் கதிசயம் இதென்கொல் மூன்று
 வையமுத் தொழிலுஞ் செய்ய வல்லவ ரவரேயன்றோ?"

எனப் பரஞ்சோதியார் (திருவிளை, இந்திரன்பழி.) ஓதுதல் காண்க.

(63)

வேறு

 இச்சா ஞானக் கிரியையெனு மிவைமூன் றிலையாய்க் கிளைத்தெழுந்திட்
 டச்சா னாழி யறச்சுவற்று மயில்வே லொருகை வலத்தமைத்து
 நச்சா தவரைத் தெறுமொருகை நளினங் குறங்கி னமைத்திமையோர்
 விச்சா தரர்சூழ் ஞானசத்தி தரன துருவம் விதிப்போரும்.