| (இ - ள்.) கூர்மை பொருந்திய இடத்தையுடைய மழுப்படை, யென்னும் படியாகத் தங்கவைத்துள்ள வேலின் வடிவாகிய தண்டினைத் தன் வலக்கையின்கண் அமைத்துக்கொண்டு, திருஅரையின்கண் தம் இடக்கையை ஊன்றிக்கொண்டு நிற்கின்ற ஐந்திடங்களைப்பற்றி நடக்கின்றவான ஐம்பொறிக் கண்ணுள்ள அறிவுகளின் அவாவைக் கெடுத்த முனிவர்கள், தேவர்கள் யாவரும் கடைத்தேறும் பொருட்டு வணங்க அவர்கட்குத் தன் அருளை வழங்குகின்ற கந்தனான முருகப்பெருமான் திருவுருவை ஆக்குவோர்களும். வை - கூர்மை. வாய் - இடம். கணிச்சி - மழு; இதனைக் கண்டர கோடரி என வழங்குவர். வதிவித்திடுதல் - தங்கவைத்தல். கோ - வேல். வணம் - வண்ணம் என்பதன் இடைக்குறை; வடிவம். தண்டு - தடி. கூர்மை பொருந்திய வேற்படை தன் அடிப்பாகம் தண்டுபோல் இருத்தலின் தண்டென்றார். கடி - அரை; இடுப்பு. முருகப்பெருமான் பழனிமலையிலெழுந்தருளியிருக்கும் திருக்கோலம், கோவணமாகிய கௌபீன உடையும் உருத்திராக்க மணிகளே அணியும், முண்டிதத் தலையும் கொண்டு வலக்கைப் பக்கலில் வேற்படையைத் தாங்கி நின்ற கோலத்தோ டமைந்த அழகிய துறவறக் கோலத் திருவுரு, இங்குச் சித்திரிக்கும் திருவுருவத்தைக் காட்டுவதாகும். எனவே, அத்தகைய திருவுருவத்தை அமைப்போர்களும் என்க. ஐவாய் - ஐந்திடம். உடம்பு, வாய், கண், மூக்கு, செவி இவை ஐம்பொறி (இயந்திரங்)கள்; இவ்வைம் பொறிகளினிடத்தே முறையே தொடுதல், சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல் ஆகிய ஐந்து புலன் (அறிவு)களும் நிற்கின்றன; ஒன்றில் மற்றொன்றின் அறிவு தோன்றாது. சுவைக்கப்படும் பொருளும் சுவைக்கும் கருவியும் ஒன்று பட்ட வழியே அவை புலனாவனவாம். இப்புலன்கள், ஈர்க்க அவ்வழியே மனஞ்சுழன்று அறிவைக் கெடுக்கின்றன. ஆகலான் இவ்வாசைகளை அறுத்த மேலோ ரென்பதைக் குறிக்க "பொறிபுலனை அவித்த உறுவர்" என்றார். உறுவர் - மிகுந்தோர்; சிறந்தோர்; மற்ற எல்லோரினும் ஐந்தாசைகளையும் அவித்தோர் சிறப்பால் மிக்கோராயினர். (65) | | ஒருகை தனது வலக்குறங்கி னணங்கைத் தழுவி யுகளமுலை் | | | மருவ வபய மொன்றாக வளர்தோல் வாள் சூலங்குலிசம் | | | பொருவேல் வாள்வில் கதைபுள்ளம் புயங்கோல் பத்துங் கரம்பத்தின் | | | இருவு மாறு முகத்தேவ சேனா பதிசீ ரிழைப்போரும் |
(இ - ள்.) தனது ஒருகையானது வலப்பக்கத் தொடையினிடத் திருக்கின்ற வள்ளிநாயகியாரைத் தழுவி இரண்டு நகில்களைப் பொருந்தவும், மற்றொருகை அன்பர்கள் அச்சத்தை ஒழிக்க அமைவுறவும், வளர்கின்ற கேடகம் அரிவாள், சூலம், வச்சிரம், போர் செய்கின்ற வேல், வாள், வில், தண்டு, வளைந்தவாள், தோளோடு சார்ந்த அம்பு ஆகிய பத்துப் படைகளையும், ஏனைய தம் பத்துக் கைகளினும் கொண்டருளியிருக்கின்ற ஆறு முகங்களையுடைய, தேவர்படைத் தலைவனாகிய முருகப் பெருமானுடைய, சிறந்த திருவுருவத்தை அமைப் போர்களும். (வி - ம்.) இதில், முருகப்பெருமான் பன்னிரு கைகளும் ஆறு திருமுகங்களுங் கொண்டு வள்ளிநாயகியாரோடும் எழுந்தருளியிருக்கின்ற திருவுருவச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது. |