பக்கம் எண் :

424தணிகைப் புராணம்

வலக்குறங்கு - தம் வலப்புறத்துத் தொடை. அணங்கு - தெய்வப் பெண், ஈண்டு வள்ளிநாயகியார். உகளம் - இரண்டு, வடசொல். அபயம் - தன் அன்பர்கட்கு அச்சந்தீர்த்தருளக் கைவிரித்துயர மேல் தூக்கி விரித்திருக்கும் அபயக்கை; இதனை அபயாஸ்தம் என்பர்; வடசொல்லால். தமிழ்மொழிக்கண் பல தூய சொற்கள் நிலைபெயரக் குறித்தனர். அதனால் நறுந்தூய தமிழ்ச்சொற்கள் நிலைபெயரக் குறித்தனர். அதனால் நறுந்தூய தமிழ்ச்சொற்கள் வழக்காறற்று மாண்டுபோயின; மீண்டும் உயிர்கொடுத்து உலகில் ஆட்சிபெற நிலவச் செய்யவேண்டும் கடப்பாடு தமிழ்மொழி நலம்பெறுவார் கடப்பாடாகும். அபயம் - அச்சமின்மை. அச்சம் அறுக்கும் கை எனக் கூறலாம். பன்னிருகைகளும் பாங்குற அமைந்த திறத்தை,

 "விண்செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகை"

எனத் தொடங்கிக் காட்டும் பன்னிரு கைகளின் பண்பு நலங்ளை நக்கீரனார் சித்திரித்திருக்கும் காட்சிகளையும்,

 "தேவர்க் குதவும் திருக்கரமும் சூர்மகளிர்
           மேவிக் குழைந்தணைந்த மென்கரமும்"

எனத் தொடங்கிக் காட்டும் குமரகுருபர அடிகளின் அரிய கைத்திறங் காட்டும் காட்சிகளையும் ஒப்பக்கண்டு மகிழ்க. இருவும் - இருத்தும் என்னும் பொருளது. சீர் - சிறப்பு; அழகு; அதனாலாய உருவத்துக்கு ஆகுபெயர்.

(66)

 இருள்கால் சீக்கு மணிக்கடக
           விடக்கை கடியிற் கொளவிருவி
 வெருள்கா லுளத்தோர்க் கஞ்சலென
           விரவும் பயஞ்சா டபயமெனத்
 தெருள்கா லொருகை வலத்தமைத்துத்
           திகழ்ந்து பணிவோர் தமக்கெல்லாம்
 அருள்கால் விழிச்சுப் பிரமணிய
           வண்ண லுருவ மமைப்போரும்.

(இ - ள்.) இருட்டினை அடியோடு போக்கி ஒளியெறிக்கின்றதான மணிக்கற்களையுடைய காப்புக்களை அணிந்த தன் இடப்பக்கக் கையினைத் தன் திருவரைக்கண் பொருந்த அமைத்து, தீவினை, நோய் முதலியவற்றால் அச்சமிக்குடைய நெஞ்சினையுடையவர்க்கு அஞ்சாதொழிக என்று மிக்க அச்சத்தை ஒழிக்கின்ற அபயக்கை யென்னும் பெயருடைய தெளிவுமிக்க ஒருகையை வலப்பக்கத்தில் அமைத்து விளங்கித் தன்னை வணங்குகின்றோர் யாவர்க்கும் திருவருள் பொலிகின்ற திருக்கண்களையுடைய சுப்பிரமணிய னென்னும் திருப்பெயரையுடைய பெருமை பொருந்திய முருகப்பெருமானது திருவுருவத்தை உண்டாக்குவோரும்.

(வி - ம்.) கால்சீத்தல் - அடியோடு போக்குதல். மணி - ஒன்பது வகை இரத்தினக்கற்கள். கடகம் - கைவளை; அல்லது தோள்வலயமுமாம். இருவி - இருத்தி. வெருள் - அச்சம். கால் - கக்குதல்; ஈண்டு மிகுதலென்னும் பொருளில் வந்தது. அருள்கால் - அருண்மழை பொழிகின்ற. விழி - கண்கள். அண்ணல் - பெருமை பொருந்தியவன்.

(67)