| | ஒற்றை முகமு மிணைவிழியு மும்மைப் பயனு மொருங்களிக்கும் | | | கொற்ற வரத மூன்றலைக்குக் குடமோ ரிரண்டு மிடங்கதிர்ப்ப | | | மற்றை வலப்பான் மணிவேலும் வாளுங் கதிர்ப்பக் கரநான்கும் | | | பெற்ற மதவெங் களிற்றூர்திப் பெருமா னுருவஞ் சமைப்போரும். |
(இ - ள்.) ஒற்றைத் திருமுகமும் இரண்டு கண்களும் வருகின்ற பிறவிகளின் பயனும் ஒருங்கே தந்தருளுகின்ற வெற்றிபொருந்திய கொடையும் தசைபோன்ற பூவினையுடைய தலையையுடைய கோழிக் கொடிகள் இரண்டும் இடப்பக்கத்தில் இறுமாந்துநிற்ப, அதன் பின்னர் வலப்பக்கத்து அழகுபொருந்திய வேலும் வாளும் ஒளிவிட்டுத் தோன்றத் திருக்கைகள் நான்குங் கொண்ட மதம்பொருந்திய கொடிய ஆண் யானையை ஊர்தியாகவுடைய முருகப்பெருமானது திருவுருவத்தை ஆக்குவோர்களும். (வி - ம்.) இணை - இரண்டு. உம்மை - வருகின்ற பிறப்பு. வரதம் - வரங் கொடுத்தல். ஊன்தலை - புலால் போன்ற உச்சிக்கொண்டை. குக்குடம் - கோழி; அதன் உருவெழுதிய கொடி : ஆகுபெயர். கதிர்ப்ப - இறுமாந்து; வீறுகொண்டு மேலோங்க. முருகப்பெருமானுக்குரிய ஊர்திகளில் ஒன்றாக இலகுவது யானை. அதனை ஈண்டு்க் கூறினார். இதனை "ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி" என்று வரும் திருமுருகாற்றுப்படை அடியானும் அறிக. இதில், முருகப்பெருமானுக்கு ஒரு திருமுகமும், நான்கு கைகளும், இடப்பக்கக் கைகளிரண்டில் இரண்டுருவெழுதிய கோழிக் கொடிகளும். வலப்பக்கக் கைகளிரண்டில் வேலும் வாளும் கொண்டு யானை ஊர்திமீ திவர்ந் திருக்கும் திருவுருவச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது. (68) | | ஞாங்கர்ப் படைகே டகங்கண்டை நளினஞ் சேவல் கதையிடங்கம் | | | ஓங்கும் பகழி வாள்வரத மொளிரு மபயஞ் சிலையவைதாம் | | | தாங்குங் கரங்க ளீராறுந் தயங்கும் வதன மோராறும் | | | ஆங்க விளங்க வருட்சரவ ணபவருவ மாக்குநரும். |
(இ - ள்.) வேற்படையும் கேடகமும் வீரகண்டாமணியும் தாமரை மலரும் சேவலும் தண்டும் கல்லுளியும் உயர்ந்து செல்கின்ற அம்பும் வாட்படையும் கொடைத்தன்மையும் விளங்குகின்ற அபயமும் வில்லும் ஆகியவைகளைத் தாங்குகின்ற திருக்கைகள் பன்னிரண்டும், விளங்குகின்ற திருமுகங்கள் ஆறும் விளங்குமாறு அருளுடைய நாணற்புல் அடர்ந்த பொய்கைக்கண் பிறந்தோனாகிய முருகப்பெருமானது திருவுருவத்தை உண்டாக்குவோரும். (வி - ம்.) ஞாங்கர் - வேற்படை. கண்டை - வீரகண்டாமணி. நளினம் - தாமரைமலர் : ஆகுபெயர். இடங்கம் - கல்லடிக்கும் உளி. பகழி - அம்பு. வரதம் - கொடுத்தல். அபயம் - பயந்தீர்த்தல். சிலை - வில். ஆங்க : உரையசைச் சொல். 1"ஆங்க உரையசை" என்பது தொல்காப்பிய நூற்பா. இந்நூற்பாவுக்கு உரையாசிரியர் சேனாவரையர் "ஆங்கக்குயிலு மயிலுங்காட்டி" என எடுத்துக்காட்டுரைப்பர். அன்றியும், உரை விளக்கத்தின்கண், "ஆங்கவும் |