பக்கம் எண் :

426தணிகைப் புராணம்

ஒப்பில் போலியும் உரை தொடங்குதற் கண்ணும் ஆதரமில் வழியும் வருதலின் வேறு கூறினார்" என்றுரைப்பதும் கருதத் தக்கதாம். வரதம் அபயமென்பன; முருகப் பெருமான் வேண்டுவவேண்டியார்க்கு வரையாது வழங்கும் திருக்கை; பகையானும் பிணியானும் அச்சந்தரும் ஏனையவிலங்கு பேய் முதலியவற்றானும் எய்திய துன்பங்களைக் கண்டு அஞ்சன்மின் எனத் தன் அடியரைக் காக்க அமைத்த திருக்கை. இவ்விரு கைகளும் இடப்புறத் தமைந்த கைகளாகும்.

இதில், முருகப்பெருமானுக்குப் பன்னிருகைகளும் ஆறு திருமுகங்களும் பொருந்திய திருவுருவம் கூறப்பட்ட தறிக.

(69)

 சீர்த்த குலிசங் கேடகமே செழித்த வரத மிடப்பாலும்
 கூர்த்த மணிவேல் வாளபயங் குலாவு வலப்பா லுங்கவின
 ஏர்த்த வாறு மலர்க்கரமு மிலங்கும் வதன மோராறும்
 சூர்த்த பிணிக டபுங்கார்த்தி கேய னுருவந் தொகுப்போரும்.

(இ - ள்.) சிறப்புப் பொருந்திய வச்சிரப்படை கேடகம் வளப்பம் பொருந்திய கொடைத்தன்மை இடப்பக்கத்தும், கூர்மை பொருந்திய அழகிய வேற்படை வாட்படைகள் விளங்குகின்ற வலப்பக்கத்தும் பொருந்தக் கொண்டு விளங்குகின்ற அழகுமிக்க மலர்போன்ற திருக்கைகள் ஆறும், அச்சந்தருகின்ற நோய்களைக் கெடுக்கின்ற கார்த்திகேயனான முருகப்பெருமானது திருவுருவத்தை அமைப்போர்களும்.

(வி - ம்.) ஏர்த்த - அழகு பொருந்திய. சூர்த்த - அச்சந்தருகின்ற "சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கின்" என்னும் திருமுருகாற்றுப்படை அடிகளில் வந்தமை இப்பொருட் டாதலறிக. தபும் - கெடுக்கின்ற. கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டோன்.

(70)

 வைத்த சுடர்வேல் வாளிரண்டும் வலப்பா லிடப்பால் வாரணப்புள்
 பைத்த மணித்தோ லோரிரண்டும் பயில வலர்ந்த நாற்கரமும்
 முத்த முறுவற் குறமாது விளங்க முன்வந் தடுத்துமலக்
 கொத்து விளியக் கடைக்கணிக்குங் குமார னுருவங் குயிற்றுநரும்.

(இ - ள்.) கொண்டுள்ள ஒளிபொருந்திய வேலும் வாளுமாகிய இரண்டும் வலப்பக்கத்தும், கோழிப் பறவையும், பசுமையையுடைய மணியழுத்திய கேடகங்கள் இரண்டும், இடப்பக்கத்தும் தங்க மலர்ந்துள்ள நான்கு கைகளும், முத்துப்போன்ற வெள்ளிய பற்களையுடைய வள்ளிநாயகியார் விளங்கியிருப்ப முன்வந்து சேர்ந்து மலத்தொகுதிகள் கெடக் கடைக்கண் பார்வை யருள்கின்ற குமாரப்பெருமானது திருவுருவத்தை ஆக்குவோர்களும்.

(வி - ம்.) வலப்பால் திருக்கைகளில் வேலும் வாளும் படைகளாகவும், இடப்பால் திருக்கைகளில் கோழியுருவெழுதிய கொடிகள் ஆகவும் கொண்டு விளங்கும் நான்கு கைகளும், ஒரு திருமுகமும் வள்ளிநாயகி யாருடன் விளங்குகின்ற குமாரப்பெருமான் திருவுருவம் எனக்கொள்க.