| பைத்த - பசுமையையுடைய; அஃதாவது சிறந்த என்னும் பொருளது. முத்தம் - முத்து : அம் சாரியை பெற்றது. முறுவல் - பற்கள். மலக்கொத்து - மலக்கூட்டம்; அவை, ஆணவம், மாயை; காமியம் முதலியன. இவைகள் ஒன்றற்கொன்று தொடர்புடையவாய்; உயிர்களைத் தொடர்ந்து பிணித்துத் துன்புறுத்தலின் கொத்து" என்றார். விளிய - கெட; தொலைய. கடைக்கணித்தல் - கடைக்கண்ணாற் பார்த்து அருள் செய்தல். என்றும் இளையராய் இறவாப் பிறவா இயற்கையராய் "மணங்கமழ் தெய்வத் திளநலத்தோடிருப்பவராதலான், "குமாரன்" என்றார். உருவம் - வடிவம். குயிற்றுநர் - செய்வோர் : ஆகுபெயர். குயிற்றுநர் என்பதில் நகரம் பெயரிடைநிலை. (71) | | படைவேல் பகழி வாடிகிரி பாச மபயம் வலத்திடத்துச் | | | சுடர்வார் குலிசஞ் சிலைதோல்புஃ டோட்டி வரத மிவைபரித்த | | | தடவான் கரமு முகமாறுந் தனிமா மயிலு மிருமாதர் | | | உடனா மெழிலுந் தருமாறு முகவ னுருவ முஞற்றுநரும். | (இ - ள்.) வேற்படை அம்பு வாள் சக்கரம் கயிறு அஞ்சுதல் தீர்த்தல் இவைகளை வலப்பக்கத்தும், சுடர்மிக்க வச்சிரப்படை வில் கேடகம் கோழிக்கொடி அங்குசம் கொடைத்தன்மை ஆகிய இவைகளை இடப்புறத்துமாக இவைகளைத் தாங்கிய பெரியவாய் உயர்ந்த பன்னிரண்டு கைகளும் ஆறுமுகங்களும் ஒப்பற்ற கரியநிற மயிலும் தெய்வயானை வள்ளிநாயகியார் ஆகிய இரு மனைவியரும் ஒன்று சார்ந்திருக்கின்ற அழகும் காட்டுகின்ற ஆறுமுகத்தையுடைய முருகப்பெருமானது திருவுருவை உண்டாக்குவோரும். (வி - ம்.) இதில், படைகள் பிடித்த பன்னிரண்டு திருக்கைகளும், ஆறு திருமுகங்களும் மயிலும் தெய்வயானை வள்ளிநாச்சியார் ஆகிய இரு மனைவியர்களும் சேர்ந்த முருகப்பெருமானது திருவுருவம் கூறப்பட்டுள்ளது. படை வேல் என்பதை, வேற்படை எனமாறுக. பாசம் - கயிறு. சிலை - வில். தோல் - கேடகம். புள் - கோழி : அதன் உருவெழுதிய கொடிக்கு ஆகுபெயர். தோட்டி - குறடு; அங்குசம். 1"உரனென்னும் தோட்டி" என்புழி அஃதிப் பொருட்டாத லறிக. பிரித்த - சுமந்த; கொண்ட. பரித்தல் - சுமத்தல், பரி என்னும் பகுதி யடியாகப் பிறந்த இறந்தகாலப் பெயரெச்சம். இஃதிப் பொருட்டா தலைப் "பரிபரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல் வருத்தம்" என்னும் சூடாமணி நிகண்டானும் அறிக. உஞற்றுநர் - செய்வோர். (72) | | வரதங் கொடிகே டகந்தோட்டி வார்ந்த வெறுழ்ப்பா சங்குலிசம் | | | பரவு மபயம் வாள்சூலம் பரிதி முசலம் வேன்முந்நாற் | | | கரமும் விளங்க வறுமுகமுங் கதிர்ப்ப விழிகள் கருணைமழை | | | தரவென் றருளுந் தாரகாந் தகன்சீ ருருவஞ் சமைப்போரும். |
(இ - ள்.) கொடைத்தன்மை கொடி கேடகம் அங்குசம் நீண்ட வலிமையையுடைய கயிறு வச்சிரப்படை யாவராலும் போற்றப்படுகின்ற அபயம் வாள் சூலம் சக்கரம் உலக்கை வேற்படை ஆகியவற்றைக் |