பக்கம் எண் :

428தணிகைப் புராணம்

இகொண்டு பன்னிரு கைகளும் விளங்க ஆறு திருமுகங்களும் ஒளிவிட்டு விளங்க, பன்னிரு திருக்கண்களும் அருண்மழை பொழிய என்றைக்கும் அருள்புரிகின்ற தாரகாசுரனுக்குக் காலன் போன்றவராகிய முருகப்பெருமானது அழகிய திருவுருவத்தை அமைப்போர்களும்.

(வி - ம்.) கதிர்ப்ப - ஒளிவிட : செயவெனெச்சம். தர : செயவெனெச்சம். என்று, என்றும் எனற்பாலதின் முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. தாரகன் - தாரகாசுரன். அந்தகன் - அந்தத்தைச் செய்தோன்; அன்றித் தாரகனுக்குக் காலன் போன்றவன் என்றலுமாம். சீர் - சிறப்பு, அழகுமாம்.

(73)

 அபய முசலம் வாள்சூல மயில்வே றோட்டி வலம்வரதம்
 தபுதீர் குலிசஞ் சிலைபதுமந் தண்டங் கதைமற் றிடமாக
 உபய விராறு கரதலமு மொளிர்வித் தாறு முகந்தோற்றிச்
 சுபநன் கருளி யிடர்துமிக்குஞ் சேனா பதிசீர் தொகுப்போரும்.

(இ - ள்.) அபயம் உலக்கை வாள் சூலம் கூர்மை பொருந்திய வேல் அங்குசம் இவற்றை வலப்பக்கத்தும், கொடுத்தல் தீவழிச் செல்லாத வச்சிரப்படை வில் தாமரைமலர் கைச்சிறுகோல் தண்டாயுதம் இடப்பக்கமாகவும் இருகூறாக அமைந்த பன்னிரண்டு கைகளும் விளங்கச் செய்து, ஆறுமுகங்களையும் தோற்றுவித்து, நலங்களைச் சிறப்புற அருளித் துன்பங்களை நீக்குகின்ற தேவர்படைத் தலைவனான முருகப் பெருமானது அழகுருவத்தை ஆக்குவோர்களும்.

அயில் - கூர்மை. தண்டம் - தண்டு; சிறுகோல். கதை - தண்டாயுதம். மற்று : வினைமாற்றுப் பொருளில் வந்தது. உபயம் - இரண்டு. ஒளிர்வித்தல் - தோன்றச் செய்தல் : பிறவினை. சுபம் - நன்மை; அஃதாவது, தம் அடியார் வேண்டும் பொருள்கள். சேனாபதி - படைத்தலைவன், முருகப்பெருமான், தேவர்படைத் தலைவன் ஆகலின், சேனாபதி என்றார். சீர் - அழகுடன் கூடிய திருவுரு.

(74)

 வரத மணிக்குண் டிகையிரண்டும் வாமத் திருக்கைத் தலமாக்கிப்
 புரவு புரியு மபயமொடு புரைதீ ரக்க வடம்வலப்பால்
 இரவை யிரிக்கும் வலத்தமைத்திட் டெல்லா வுலகு மினிதளித்துப்
 பிரம சாத்த னெனப்பொலிந்த பெருமா னுருவம் பிறக்குநரும்

(இ - ள்.) கொடுத்தல் அழகிய கமண்டலம் இரண்டும் இடப்பக்கத் திருக்கைகளின்மீது வைத்துக்கொண்டு பாதுகாத்தருள்கின்ற அபயத்தோடு குற்றமற்ற உருத்திராக்க மாலையை வலப்புறத்தே இருளையோட்டுகின்ற வலக்கையின்கண் அமைத்து, எல்லா உலகங்களையும் இன்பமாகப் பாதுகாத்து பிரமசாத்தன் (பிரமனை ஒறுத்தவன்) என்னும் திருப்பெயர் கொண்டு விளங்குகின்ற முருகப்பெருமானது திருவுருவத்தை அமைப்போர்களும்.

(வி - ம்.) கொடையும் மணிக்கமண்டலமுங் கொண்ட இடத் திருக்கைகளும், அபயமும், உருத்திராக்க வடமும்கொண்ட வலப்பக்கத் திருக்கைகளை அமைத்திட்டு எல்லா வுலகங்களையும் காத்தருளிய முருகப் பெருமான் திருவுருவம் குறிக்கப்படுகின்றது.