பக்கம் எண் :

430தணிகைப் புராணம்

(வி - ம்.) இதில், திருவரையின்மீது தம் இடக்கையை ஊன்றிக் கொண்டு, வலக்கையில் தாமரை மலரையேந்தி, திருவடிகளில் சதங்கை யணிபூண்டு திருமால் முதலியோர் வணங்க நிற்கின்ற இளந்திருக்கோலத் திருவுருவம் குறிக்கப்பெறுகின்றது.

கடி - அரை; இடுப்பு. இருவி - இருத்தி : இ விகுதிபெற்ற வினை யெச்சம். கமலம் : ஆகுபெயர். கிண்கிணி - கிண்கிணென்னும் ஒலியுடைய சதங்கை. கவைஇ - அணிந்து : சொல்லிசை யளபெடை. பாலஉரு - இளந்திருக்கோல வடிவம். உரிஞ - உரிஞ்ச, பட்டுத்தேய! படி - ஒப்பு, உவமம். பகவன் - எப்பொருள்களினும் பங்குகொண்டு உறைவோன்.

(77)

 அழலு நெடுவேல் வாள்பகழி யபயம் வலநாற் கரத் தமைத்துத்
 தழல்வச் சிரங்கே டகம்வரதஞ் சாபமிடநாற் கரத்தாக்கி
 எழின்மிக் கொழுகு முகமாறு மிலங்கத் தோற்றிக் கிரவுஞ்சம்
 புழைபட் டழியப் படைவிடுத்த புத்தே ளுருவம் பொறிப்போரும்.

(இ - ள்.) வருத்துகின்ற நீண்ட வேற்படை வாள் அம்பு அபயம் வலப்பக்கம் அமைந்த நான்கு கைகளினுங்கொண்டு, நெருப்பைப் போன்ற கொடிய வச்சிரப்படை கேடகம் கொடை வில் ஆகியவற்றை இடப்பக்கம் அமைந்த நான்கு கைகளினுங்கொண்டு அழகுமிக்கனவாய் அழகொழுகுகின்ற ஆறுமுகங்களும் விளங்கித் தோன்ற அன்றிற் பறவை வடிவான மலையானது துளைபட்டு அழிந்தொழிய வேற்படையை விடுத்த கடவுளான முருகப்பெருமானது திருவுருவை
அமைக்கின்றோர்களும்.

(வி - ம்.) இதில், வேல் வாள் அம்பு அபயம் இவற்றை வலப்புறக் கை நான்கினும், வச்சிரப்படை, கேடகம் கொடை வில் இவற்றை இடப்புறக் கை நான்கிலும் அமைத்து, ஆறுமுகங்களும் பொருந்த அமைத்த அன்றிற்பறவை (கிரவுஞ்சம்) உருவ மலையைத் துளைத்துத் தூளாக்கிய முருகப்பெருமானது திருவுருவம் குறிக்கப் பெறுகின்றது.

அழலும் - நெருப்புப்போல் சுட்டுவருத்துகின்ற. பகழி - அம்பு. சாபம் - வில். புழை - தொளை. படை - வேல். புத்தேள் - கடவுள், பொறிப்போர் - செய்வோர். பொறித்தல் - பதித்தல்; எழுதுதல். கல்லில் உருவைத் தோண்டிச் சமைத்தலும், துணியில், அல்லது தாளில் உருவத்தை எழுதுதலும் ஆம்.

(78)

 புலிங்கங் கதிப்பத் தீத்தும்மும் பொருவே லபயம் வலத்திருகைத்
 தலங்கொண் டிடப்பா லிருகரத்துந் தக்க வரதம் வச்சிரமும்
 இலங்க வணிந்து திரைக்கடலு மெழுபல் வரையு முலகனைத்தும்
 குலுங்கக் கடவு மயிலூர்திக் கோமா னுருவ மியற்றுநரும்.

(இ - ள்.) நெருப்புப் பொறிபறக்கத் தீயைக் கக்குகின்ற போர் செய்கின்ற வேற்படை அபயம் ஆகியவற்றை வலப்பக்கத்து இரண்டு கைகளினுங் கொண்டு இடப்பக்கத்து இரண்டு கைகளிடத்தும் சிறந்த கொடை வச்சிரப்படை, இவைகளை விளங்குமாறு அணிந்து அலைகளையுடைய கடலும் மேலெழுந்துயர்ந்த பலமலைகளும் உலகங்கள் முழுதும்