| (இ - ள்.) உலகியலும் அறிவியலும் முழுதும் அறிந்துணர்ந்தோரின் பேரறிவையும் கெடுக்கின்ற மங்கையர்களின் கைகளில் கொண்டு திரளாகிய வெண்சாமரையை இருபக்கங்களினும் வீசிக்கொண்டுவர, ஒளிபொருந்திய வெண்கொற்றக் குடைமேலே நிழல்செய்ய அழகிய பிரம்பைக் கைக்கொண்டோராகியவழி விலக்குவோர் பிரம்பால் அடித்து மிக்க சனத்தின் கூட்டத்தை வழிவிலக்கிக் கொண்டுவர, வெற்றி பொருந்திய தேவர்கள் எதிர்கொண்டு நிற்ப, விரைவில் வானுல வழியைக் கடந்து சென்று. (வி - ம்.) மிக்க அழகும் இளமையுமுடைய மகளிர் என்பதைக் குறிக்க. "முற்ற . . . . . முரியும் மகளிர்" என்றார். முரியும் என்னும் தன்வினை, ஈண்டுப் பிறவினைப் பொருளில் வந்தது. முதுக்குறைவு - பேரறிவு. உம்மை : உயர்வு சிறப்புக் குறித்துவந்தது. கற்றை - திரள்; சேர்க்கை. பல வெண்மயிர்கள் ஒன்றாகத் திரண்டது. கவரி- வெண்சாமரை. கவரிமானின் வால் மயிர் : முதலாகு பெயர். கவிகை - குடை. நிழற்ற - நிழல்தர. ஒற்றி - அடித்து, புடைத்து. வேத்திரம் - பிரம்பு. மாசனத்திரள் - மிக்க சனக்கூட்டம். எதிர்கொள்ள - வருகையை எதிர்பார்த்து நிற்ப. வெய்து - விரைவு. (84) | | துளிக்கும் பசுந்தேங் கற்பகப்பூஞ் சோலை வதிந்து குங்குமத்திற் | | | குளிக்குங் களப முலைமடவார் கொழுந்தீங் கலவி யமிழ்தளைந்து | | | களிக்குங் களியான் வருவைகல் கழித்து நாக மழிகாலை | | | அளிக்கும் பிரம னுலகெய்தி யரிய போக நனிநுகர்ந்து. |
(இ - ள்.) சிதறுகின்ற பசிய தேனையுடைய கற்பகத் தருக்களையுடைய அழகிய பொழிற்கண் பன்னாள் இருந்து, குங்குமத்தில் கலந்த கலவைச் சாந்து பூசப்பட்ட கொங்கைகளையுடைய இளமங்கையர்களின் கொழுத்த இனிமை பொருந்திய புணர்ச்சியின்பமாகிய அமிழ்தில் மூழ்கி, மகிழ்கின்ற மகிழ்ச்சியினால் வருகின்ற நாள்களைப் போக்கி, வானுலகம் அழிவெய்துகின்ற காலத்தில் கிட்டுகின்ற பிரமன் உலகாகிய சத்தியவுலகத்தை யடைந்து அரிய இன்பத்தை ஆங்கே மிக நுகர்வு செய்து. (வி - ம்.) துளிக்கும் - சிதறுகின்ற; பிலிற்றுகின்ற. பசுந்தேன் - செவ்வி கெடாத தேன். குங்குமத்தில் குளிக்கும் களபம் - குங்குமத்துடன் புழுகும் கத்தூரி முதலியனவும் கலந்துள்ள கலவைச் சந்தனச் சேறு. மடவார் - இளமங்கையர். கலவி - கலத்தல்; புணர்தல். அமிழ்து - அமிழ்தையொத்த இன்பம். நாகம் - வானுலகம். அளிக்கும் - தருகின்ற; கிட்டுகின்ற, பிரமன் உலகு - நான்முகன் உலகம். நனி - மிக : உரிச்சொல். மிகுதிப் பொருள் குறித்துவந்தது.1'சால உறுதவ நனிகூர் கழிமிகல்' என்பது நன்னூல் நூற்பா. (85) | | அந்த வுலக மழிகாலை யரவப் பள்ளி நெடுமால்வை | | | குந்த நிலவிப் பெரும்போகங் கொள்ளை கொண்டங் கவ்வுலகும் | | | சிந்து மளவிற் றிப்பியமாய்த் திகழ்ந்த கந்த வுலகணைந்திட் | | | டெந்த வளமு மெதிர்நிற்ப வினிது வாழ்ந்து வீடுறுவார். |
|