பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்435

(இ - ள்.) அப் பிரமலோகமும் அழிவுற்ற காலத்து பாம்பணைப் பள்ளியையுடைய நீண்ட திருமாலின் வைகுந்த வுலகத்தைச் சேர்ந்து வாழ்ந்து மிக்க இன்பத்தை அங்கும் நுகர்ந்து அந்தவுலகமும் அழிந்த காலத்தில் மேன்மையாக விளங்குகின்ற கந்தவுலகத்தைச் சேர்ந்து எல்லாவகை இன்பமும் ஒருங்கே கிட்ட இன்பத்துடன் வாழ்ந்து பின்னர் வீடுபேறடைவார்.

(வி - ம்.) அரவப்பள்ளி - ஆதிசேடன் என்னும் பெரும்பாம்பையே படுக்கைப் பாயலாகக் கொண்டு பாற்கடலிலே அறிதுயில் செய்தருளுவர் என்று திருமால் வரலாறு கூறும் பாகவதம் முதலிய நூல்கள் உரைக்கும். திருமால், நிலங்கடந்த நெடுமுடியண்ணல் ஆதலான் "நெடுமால்" எனப்பட்டார். சிந்துதல் - அழிதல். திப்பியம் - திவ்விய மென்னும் வடசொற் சிதைவு. கந்தவுலகு - கந்தப்பெருமானது திருவுலகம். எதிர்நிற்ப - நேரே எளிதில் தேடாதுகிடைப்ப என்னும் பொருளது.

"இச்சாஞானம்" எனத் தொடங்கும் இப்படல (64)்ச் செய்யுள் முதல் இதுவரை ஒரே பொருள்மேல் அடுக்கி முற்றுறாது தொடர்ந்து வந்த குளகச் செய்யுட்கள், இதனோடு முற்றுப்பெற்றது.

(86)

 மல்கும் பொருளின் றிரட்கேற்ப மாசைக் குவையா லிரசதத்தால்
 புல்கு மேனைத் தாதுவாற் பொற்ப வுருவங் குயிற்றுநர்பால்
 அல்கும் பயனெவ் வளவாமவ் வளவும் பொருளா னல்கூர்ந்து
 மெல்கு மவர்சித் திரித்தேனும் விரும்பிற் பயப்ப துண்மையே.

(இ - ள்.) தம்பால் நிறைவுற்ற பொருளின் தொகுப்புக்கொப்பப் பொன்னினாலும் வெள்ளியாலும் சேர்ந்த செம்பு முதலிய மற்றை உலோகங்களாலும் அழகுபொருந்த முருகப்பெருமானது திருவுருவத்தை ஆக்குவோரிடத்துக் கிட்டுகின்ற அறப்பயன் எவ்வளவாகுமோ அவ்வளவு பொருளினால் வறுமையுற்று மெலிவடைவோர் தம் மனத்திடத்து உருவப்படுத்தியாவது விருப்பங்கொண்டால் பயன்கிடைப்பது உண்மையாகும்.

(வி - ம்.) மாசை - பொன். குவை - கட்டி. இரசதம் - வெள்ளி. தாது - உலோகங்கள். அல்கும் - சேருகின்ற. மெல்குமவர் - மெலிவடைவோர். சித்திரித்தில் - மனத்தில் உருவமாகக் கொள்ளுதல். வறுமைப்பட்டோர் இறைவன் திருவுருவத்தை எந்த உலோகங்களானும் அமைத்தல் ஒல்லாது. அத்தகையோர் மனத்தால் இடைவிடாது அவ்வுருவமைத்ததாகக் கருதி வரின், முருகப் பெருமானுக்குப் பொன் வெள்ளி முதலியவற்றால் உருவஞ் சமைத்தோர்க்குக் கிட்டும் பயன் யாவும், கிட்டுமென, திருவுருவமைத்து வழிபடும் பேறு குறித்துக் கூறினார்.

இக்கருத்தை அறுபான் மும்மைத் தொண்டருள் ஒருவராய பூசலார் நாயனார் என்பார் திருநின்றவூர்க்கண் தம் மனத்தில் திருக்கோயில் எடுப்பதாகக் கருதிக் கருதி முற்றுவித்ததாகக்கொண்டு அதில் இறைவன் எழுந்தருளுதற்குக் குடமுழுக்கு நாளொன்றையுங் குறித்திருந்தனர். அதுகாலை ஆட்சிசெலுத்திய பல்லவ வேந்தன் காஞ்சிபுரத்திறைவற்குக் கற்றளி யெடுப்பித்து முற்றுவித்து, அவனும் அக்கோயிலுக்குப் பூசலார்கொண்ட நாளில் குடமுழுக்குச் செய்ய ஏற்பாடு
செய்திருந்தான்.