பக்கம் எண் :

அகத்தியன் அருள்பெறு படலம்437

 நிலனார் தலம்பல் லவற்றுள்ளு நிகழ்நாற் பொருளு மெளிதளிக்கும்
 தலமா வெமக்கு மருள்புரியத் தக்க வதுவே தலமதனால்.

(இ - ள்.) இன்னும் பலவாறாகச் சொல்லுவதென்ன? தாம் அருள் செய்து பணியவைக்கின்ற தேவர்கள் பலரினும் இலைவடிவமைந்த வேற்படையைத் திருக்கையிடத்துக் கொண்ட முதல்வனாகிய முருகப்பெரு மானே மிகமிக உயர்ந்த தேவனாவன்; உலகத்தின்கட் சிறந்த தலங்கள் பலவற்றினும் யாவரும் கொள்ளப்படுகின்ற அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு அரும்பொருளையும் எளிதிற்கொளத் தருகின்ற திருத்தலமாக எமக்குங்கூடத் திருவருள் புரியத் தகுதிவாய்ந்ததான அத்திருத்தணிகைத் தலமே தலமாகும் ஆதலால்.

(வி - ம்.) பணிக்கும் - பணியவைக்கும் : பிறவினை. பணிக்கும் என்பதற்குப் பணிகொள்ளச் செய்யு மென்றலுமாம். இலைவேல் - இலை போன்ற வடிவமைந்த வேற்படை : உவமத் தொகை. நனிமிக - மிகுதி யென்னும் பொருட்டு. உயர்ந்தோங்கு நெடுவரை யென்பதுபோல. ஒருபொருட் பன்மொழி. நிலன் - நிலம்; ஈண்டுத் திருத்தலம். நாற் பொருள் - நால்வகைப் பொருள். அவை, அறம் பொருள் இன்பம் வீடு என்பன. இறைவனாகிய சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளை உணர்த்தியது இத்திருத்தணித் தலத்திலாதலால், தமக்கு எளிமையின் முருகப்பெருமான் பிரணவப் பொருளை அருளிய சிறப்புத் தோன்ற அப்பெருமானே, "எமக்கும் அருள்புரியத் தக்க அதுவே தலம்" என்றனர்.

(89)

 ஆங்குப் படர்ந்து ஞானசத்தி தரனை யகத்தா மரையிருவி
 ஓங்குந் தவத்தான் முனிவரநி னுள்ளம் விழைந்த விழைவெல்லாம்
 பாங்கு பெறத்தெவ் வுதியென்று பணித்த காசி நகரிறைவன்
 பூங்கட் கமல பதமிறைஞ்சி விடைகொண் டினிது புறம்போந்தான்.

(இ - ள்.) அகத்திய முனிவனே! நீ அத்திருத்தணிகைத் தலத்துக்குச் சென்று உண்மையறிவைக் கொண்டிருப்பவனாகிய முருகப்பெருமானை உனது உள்ளத் தாமரைமலர்க்கண் இருக்கச்செய்து, மிக்க தவத்தினானே நின்மனம் விரும்பிய விருப்பம் யாவும் சிறப்பாக அமைவுற நீ கொள்வாயாக வென்று மொழிந்த காசிநகர்க் கிறைவனாகிய சிவ பெருமானுடைய பொலிவுபெற்ற இதழ்களையுடைய செந்தாமரை போன்ற திருவடிகளை வணங்கி விடைபெற்றுக் கொண்டு இன்பமாகப் புறப்பட்டு வெளியேறினார் அகத்தியர்.

(வி - ம்.) படர்ந்து - சென்று. ஞானசத்திதரன் - ஞானசத்தியைக் கொண்டவன்; உண்மையறிவுடையோன். அகத்தாமரை - மனமாகிய தாமரைமலர் : இருபெயரொட்டுப் பண்புத்தொகை. தாமரை, மலருக்கு ஆகுபெயர். பாங்கு, உரிமையென்னும் பொருட்டு. "பாங்கழகுரிமை பக்க மாகும்" என்பது, சேந்தன் திவாகரம். தெவ்வுதி - கொள்வாயாக : முன்னிலை யேவலொருமை வினைமுற்று. தெவ் - கொள்ளுதல். "தெவுக் கொளற் பொருட்டே" என்பது தொல்காப்பியம். பணித்த - சொல்லியருளிய. காசிநகர் இறைவன் - ஈண்டுச் சிவபெருமான் : இடத்தால் வந்த பெயர். பூ - பொலிவு. கண் - இடம். மலருக்கு இடனாக இருப்பது அதன் இதழ்; ஆதலால் இடமெனப் பொருள்