பக்கம் எண் :

438தணிகைப் புராணம்

கூறப்பட்டது. கமலபதம் : உவமத் தொகை. உவமவுருபும் பொதுத் தன்மையும் தொக்குநின்றன. புறம் போந்தான் - வெளிவந்தான்.

(90)

அரங்கும் வினைகள் வழிக்கொள்ளு மாற்றன் முனிவன் வழிக்கொண்டுகுரங்குந் துணர்ப்பல் லவச்சாகைக் குளிர்பூஞ் சோலை வானிழன்றபுரங்கொ லிறைவன் பஃறலமும் போற்றி முழவ மெனக்குயில்கள்இரங்கும் பொதும்பர்ப் பருப்பதத்தை யெய்தி வணங்கி யியங்கினான்.

(இ - ள்.) கெடுகின்ற தீவினைகள் வழிக்கொண்டு ஓடுகின்ற தல ஆற்றல் பெற்ற அகத்திய முனிவர் நடந்துசென்று, சூழ்ந்திருக்கின்ற பூங்கொத்துக்களையுடைய தளிர்களையுடைய கிளைகளையுடைய குளிர்ந்த அழகிய சோலைகள் வானத்தளவு நிழல்தரும் முப்புரமெரித்த சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற பல தலங்களையும் வணங்கி வாத்திய இசை யென்னும்படி குயில்கள் கூவுகின்ற சோலைகளையுடைய திருப் பருப்பதத்தை அடைந்து வணங்கி வழிச்
செல்வாரானார்.

(வி - ம்.) அரங்கும் - கெடுகின்ற. வினை- நல்வினை, தீவினைகள். வழிக்கொள்ளல் - ஓடிப்ே்பாதல். ஆற்றல் - தவத்தான்வரும் வல்லமை. குரங்குதல் - வளைதல்; சூழ்ந்திருத்தல். துணர் - பூங்கொத்து. சாகை - கிளை. நிழன்ற - நிழல்தந்த: ஈண்டு நிகழ்காலம். சிறப்புப்பற்றி இறந்தகாலமாயிற்று. புரம் - திரிபுரம். முழவம் - முழவோசை, பொதும்பர் - சோலை. பருப்பதம் - சீபருப்பதம்.

(91)

 பூங்காவ கத்துப் பசுங்கோட்டுப் புதன்மென் மயிரின் வாலணில்கள்
 மூங்கா வரற்றக் குறுந்தாள மோட்டா மைகடாழ் புனலழுந்தி
 நீங்கா மகிழ்ச்சித் தலைநிற்கு நெடுவெண் டரங்க முகலிதழீஇ
 ஓங்கா நின்ற தென்கயிலை யுற்றுப் பணிந்து நெறிச்சென்றான்.

(இ - ள்.) பூஞ்சோலைக்கண் பசிய கிளையிடத்துப் புதர்போன்ற மெல்லிய மயிரமைந்த வாலையுடைய அணில்களும் கீரிகளும் கீச்சிட்டுக் கத்தக் குறுகிய கால்களையுடைய வயிற்றினையுடைய ஆமைகள் ஆழமுள்ள நீர்நிலைக்கண் அமிழ்ந்து இடையறாத மகிழ்ச்சி மேற்கொண்டு நிற்கும் தன்மைத்தாய நீண்ட வெள்ளிய அலைகளையுடைய பொன் முகரியாற்றில் மூழ்கி வந்து உயர்ந்துள்ள தென்கயிலையாகிய திருக்காளத்தி மலையைச் சார்ந்து அங்கு எழுந்தருளியிருக்கின்ற காளத்தி நாதரை வணங்கி மீண்டு வழிநடந்து செல்லலானார்.

(வி - ம்.) பூங்கா - மலர்களையுடைய சோலை. புதல் - புதர்; அணில்களின் வால்மயிர்கள் புதல்போற் கிளைத்து அடர்ந்திருத்தலான், "புதல் மென்மயிரின் வாலணில்கள், என்றார். மூங்கா - கீரி. அரற்ற - கத்த. குறுந்தாள - குறுகிய கால்களையுடைய. மோடு - வயிறு. தரங்கம் - அலை. முகலி - பொன்முகரி ஆறு. தழீஇ - தழுவி; மூழ்கி, நீராடி யென்னும் பொருளது. தென்கயிலை - திருக்காளத்தி மலை; அதிலுள்ள காளத்திநாதரை உணர்த்தலால் இடவாகு பெயர். நெறிச் சென்றான் - வழிநடந்து செல்லலானார்.

(92)

 போதா வினம்பூ ணிகள்கம்புள் புனற்பால் பிரிக்கும் புண்ணேமி
 தேதா வெனப்பண் முரன்றெறிந்து சிறைவண் டினஞ்சூழ் மலர்ப்பிறங்கல்